இந்தியா அசத்தல் பந்துவீச்சு: 100 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி..!
34.5 ஓவர்களில், இங்கிலாந்து அணி 129 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
லக்னோ,
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் லக்னோவில் இன்று நடைபெற்ற 29-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, நடப்பு சாம்பியன் இங்கிலாந்துடன் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா- சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். சுப்மன் கில் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகியும் ஷ்ரேயாஸ் அய்யர் 4 ரன்னிலும் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். இதனால் இந்தியா 40 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்த போதிலும், மறுபக்கம் ரோகித் சர்மா உறுதியாக நின்று விளையாடினார்.
அவருடன் கே.எல். ராகுல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தது. இதனால் ஸ்கோர் உயர்ந்த வண்ணம் இருந்தது. ரோகித் சர்மா 66 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைசதம் அடித்தார். கே.எல். ராகுல் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 80 ரன்களை கடந்து சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 87 ரன்கள் எடுத்திருந்தபோது அடில் ரஷித் பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஜடேஜா 8 ரன்னிலும், முகமது ஷமி 1 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 229 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.
அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோ மற்றும் டேவிட் மலான் இருவரும் முறையே 14 மற்றும் 16 ரன்களில் அவுட்டாகினர். தொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் டக்அவுட்டாகினர். இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். அதிகபட்சமாக லியாம் லிவிங்ஸ்டன் 27 ரன்கள் எடுத்தார்.
இந்த நிலையில் 34.5 ஓவர்களில், இங்கிலாந்து அணி 129 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.