சென்னையில் விளையாட ஆர்வமாக உள்ளது... பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பேட்டி
சென்னையில் விளையாட ஆர்வமாக உள்ளதாக பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கூறியுள்ளார்.
சென்னை,
ஐசிசி நடத்தும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. பல ஆண்டுகளாக இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இருநாட்டு தொடர்களில் விளையாடாமல் இருந்துவரும் சூழலில், ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை தொடர்களில் மட்டும் இரு அணிகளும் மோதி வருகின்றன.
உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் அணி, நடப்பு உலகக்கோப்பை தொடரில் இருவரை 4 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.
பாகிஸ்தான் அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியுடன் மோத உள்ளது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நாளை நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்திற்காக பாகிஸ்தான் அணி வீரர்கள் நேற்று சென்னைக்கு வந்தடைந்தனர்.
11 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் அணி வீரர்கள் சென்னை வந்துள்ளனர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தான் அணி வீரர்கள் தீவிர வலைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை மைதானத்தில் விளையாட உள்ளது குறித்து பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹாக் பேட்டியில் கூறியதாவது;
"கடந்த காலங்களில் சென்னை ரசிகர்கள் பாகிஸ்தான் அணிக்கு சிறப்பான ஆதரவை கொடுத்துள்ளனர். சென்னை ஒரு சிறப்பான இடம். இங்கு விளையாடுவதற்கு ஆர்வமாக உள்ளது. பாகிஸ்தான் அணி சென்னையில் விளையாடிய இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் (1997 மற்றும் 2012) வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக 1999ல் நடந்த பரபரப்பான டெஸ்டை போட்டியைப் பற்றிய நல்ல நினைவுகளும் எங்கள் அணிக்கு உண்டு." இவ்வாறு அவர் கூறினார்.