சர்வதேச டி20 கிரிக்கெட்: மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆன இந்திய கேப்டன் ரோகித் சர்மா


சர்வதேச டி20 கிரிக்கெட்: மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆன இந்திய கேப்டன் ரோகித் சர்மா
x

Image Courtesy: AFP 

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா மோசமான சாதனை ஒன்றுக்கு சொந்தக்காரர் ஆனார்.

இந்தூர்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரு ஆட்டங்களில் தோல்வி அடைந்து தென்ஆப்பிரிக்க அணி ஏற்கனவே தொடரை இழந்து விட்டது.

இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் குவித்தது. ரூசோவ் 48 பந்துகளில் 100 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா தான் சந்தித்த 2-வது பந்திலே டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

இறுதியில் இந்திய அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்த ஆட்டத்தில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா ரபாடா பந்துவீச்சில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா ஒரு மோசமான சதனைக்கு சொந்தக்காரர் ஆனார். அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை ஒற்றை இலக்கில் ஆட்டம் இழந்த நபர்களின் வரிசையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை ஒற்றை இலக்கில் ஆட்டம் இழந்த நபர்களின் வரிசையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 43 முறை ஆட்டம் இழந்து முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த படியாக அயர்லாந்தின் கெவின் ஓ பிரெய்ன் 2வது இடத்தில் உள்ளார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒற்றை இலக்கில் ஆட்டம் இழந்த நபர்களின் வரிசை:-

ரோகித் சர்மா - 43 முறை

கெவின் ஓ பிரெய்ன் - 42 முறை

முஷ்பிகுர் ரஹீம் - 40 முறை

முகமது நபி - 39 முறை

ஷாகித் அப்ரிடி - 37 முறை


Next Story