ஐ.பி.எல். 2024: சொந்த மைதானத்தை மாற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி - விவரம்..!
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன.
புதுடெல்லி,
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலங்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டியில் விளையாடும். இதில் 7 ஆட்டங்கள் சொந்த மைதானத்திலும், 7 ஆட்டங்கள் எதிர் அணிகளின் சொந்த மைதானத்திலும் நடைபெறும்.சென்னை அணிக்கு சேப்பாக்கம், மும்பை அணிக்கு வான்கடே, கொல்கத்தா அணிக்கு ஈடன் கார்டன், பெங்களூரு அணிக்கு எம். சின்னசாமி மைதானம், குஜராத் அணிக்கு நரேந்திர மோடி மைதானம், பஞ்சாப் அணிக்கு மொகாலி மைதானம் ஆகியவை சொந்த மைதானங்களாக இருக்கிறது.
இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி வரும் ஐ.பி.எல். தொடரில் சொந்த மைதானத்தை மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மொகாலிக்கு பதில் பஞ்சாப் மாநிலம் முல்லான் பூரில் உள்ள மகாராஜா யத்விந்தர் சிங் சர்வதேச மைதானத்தை உள்ளூர் (சொந்த) மைதானமாக மாற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முல்லான்பூர் மைதானம் ரூ.230 கோடி செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தை பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகத்தினர் சமீபத்தில் பார்வையிட்டு சென்றனர்.மொகாலியில் உள்ள ஐ.எஸ்.பிந்த்ரா மைதானத்தை விட முல்லான்பூர் ஸ்டேடியம் அதிக இருக்கைகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.