ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தா -ஐதராபாத் அணிகள் இன்று மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில் கொல்கத்தா -ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
கொல்கத்தா,
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்று முக்கியமான கட்டத்தை நெருங்குகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் கேப்டன் ராணா தலைமையிலான கொல்கத்தா அணி, கேப்டன் மார்க்ரம் தலைமையிலான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியுடன் கோதாவில் குதிக்கின்றன.
முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 3 வெற்றி, 5 தோல்வி என்று 6 புள்ளியுடன் பட்டியலில் 9வது இடம் வகிக்கிறது. கடந்த ஆட்டத்தில் 9 ரன் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சை தோற்கடித்த ஐதராபாத் அணி அந்த வெற்றி வேட்கையை நீட்டிக்க தீவிரம் காட்டுகிறது.
கொல்கத்தாவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் சதம் அடித்த ஹாரி புரூக், அதன் பிறகு 4 ஆட்டங்களில் வெறும் 34 ரன் மட்டுமே எடுத்து தடுமாற்றம் கண்டுள்ளார். இந்த ஆட்டத்தின் மூலம் அவர் மீண்டும் பார்முக்கு திரும்புவாரா என்ற எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. மற்றபடி அபிஷேக் ஷர்மா, கேப்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 9 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 6 தோல்வியுடன் 6 புள்ளி எடுத்திருக்கிறது. எஞ்சிய 5 லீக்கிலும் வெற்றி பெற்றால் மட்டுமே 'பிளேஆப்' சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும். ஒன்றில் தோற்றாலும் வாய்ப்பு மங்கி விடும். எனவே கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் கொல்கத்தா வீரர்கள் களம் இறங்குகிறார்கள்.
அந்த அணியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு நிலையாக இல்லை. ஆந்த்ரே ரஸ்செலிடம் (9 ஆட்டத்தில் 142 ரன்) பழைய அதிரடியை பார்க்க முடியவில்லை. கேப்டன் ராணா, வெங்கடேஷ் அய்யர், ரிங்கு சிங் ஆகியோரும் ரன்மழை பொழிய வேண்டியது அவசியமாகும். ஏற்கனவே ஐதராபாத்திடம் 23 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய கொல்கத்தா அணி அதற்கு பதிலடி கொடுக்குமா என்பதை பார்க்கலாம்.