5 விக்கெட்டுகளை வீழ்த்தி மார்க் வுட் அபாரம்: முதல் வெற்றியை பதிவு செய்த லக்னோ அணி..!!
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 50 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.
லக்னோ,
16வது ஐபிஎல் சீசனின் இன்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் ஆகியோர் களம் இறங்கினர்.
இதில் கே.எல்.ராகுல் 8 ரன்னில் வீழ்ந்தார். இதையடுத்து மேயர்ஸ் உடன் தீபக் ஹூடா இணைந்தார். இந்த ஜோடியில் அதிரடியில் மிரட்டிய மேயர்ஸ் 38 பந்தில் 73 ரன்கள் குவித்த நிலையில் அவுட் ஆனார். மறுமுனையில் தீபக் ஹூடா 17 ரன்னிலும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 12 ரன்னிலும் வீழ்ந்தனர். இதையடுத்து குருனால் பாண்ட்யா, நிக்கோலஸ் பூரன் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.
இதில் அதிரடியில் மிரட்டிய நிகோலஸ் பூரன் 21 பந்தில் 36 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து குர்ணால் பாண்ட்யாவுடன், ஆயுஷ் பதோனி ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ரன் சேர்த்த பதோனி 18 (7) ரன்களில் கேட்ச் ஆனார்.
முடிவில் குர்ணால் பாண்ட்யா 15 (13) ரன்களும், கவுதம் 6 (1) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் குவித்தது. டெல்லி அணியின் சார்பில் அதிகபட்சமாக கலீல் அகமது மற்றும் சேட்டன் சகாரியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் சார்பில் பிரித்வி ஷா மற்றும் கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் பிரித்வி ஷா 12 ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மிட்சல் மார்ஸ் (0) ரன் ஏதும் எடுக்காமலும், ஷர்பாஸ் கான் 4 ரன்னிலும் அடுத்தடுத்து மார்க் வுட் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர்.
அடுத்ததாக டேவிட் வார்னருடன் ரூசோவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் அதிரடி காட்டிய ரூசோ 30 (20) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து ரோவ்மேன் பவல் 1 ரன்னிலும், அமன் ஹக்கிம் கான் 4 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
மறுமுனையில் தனி நபராக போராடிய கேப்டன் டேவிட் வார்னரும் 56 (48) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய அக்ஷர் படேல் 16 (11) ரன்களில் ஆட்டமிழந்தார்.
முடிவில் முகேஷ் குமார் ரன் ஏதும் எடுக்காமலும், குல்தீப் யாதவ் 6 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் டெல்லி அணி 20 ஒவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. லக்னோ அணியின் சார்பில் அதிகபட்சமாக மார்க் வுட் 5 விக்கெட்டுகளும், பிஷ்னோய் 2 மற்றும் அவேஷ் கான் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதன்மூலம் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய லக்னோ அணி, லீக் சுற்றின் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.