ஐபிஎல்: எளிதான வெற்றிவாய்ப்பை குஜராத்திடம் பறிகொடுத்தது லக்னோ அணி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பரபரப்பான ஆட்டத்தில் லக்னோ அணி 7 ரன் வித்தியாசத்தில் குஜராத்திடம் வீழ்ந்தது.
லக்னோ,
ஐ.பி.எல். கிரிக்கெட்
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும், மற்ற பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோத வேண்டும். அதாவது ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 ஆட்டங்களில் ஆட வேண்டும். லீக் சுற்று முடிவில் 'டாப்-4' இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்த போட்டி தொடரில் லக்னோவில் நேற்று மாலை நடந்த 30-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
அல்ஜாரி ஜோசப் நீக்கம்
லக்னோ அணியில் வேகப்பந்து வீச்சாளர் யுத்விர் சிங்குக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ராவும், குஜராத் அணியில் வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப்புக்கு மாற்றாக சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமதுவும் சேர்க்கப்பட்டனர்.
'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விருத்திமான் சஹா, சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர். மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் லக்னோ அணியின் பவுலர்கள் தொடக்கம் முதலே சிறப்பாக பந்து வீசி நெருக்கடி அளித்தனர். இதனால் பேட்ஸ்மேன்கள் பெரிய ஷாட் அடிக்க முடியாமல் தடுமாறினார்கள்.
2-வது ஓவரிலேயே சுப்மன் கில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். அவர் குருணல் பாண்ட்யா பந்து வீச்சை ஓங்கி அடிக்க அது மேல் நோக்கி எழும்பி ரவி பிஷ்னோய் கையில் சிக்கியது. இதைத்தொடர்ந்து கேப்டன் ஹர்திக் பாண்ட்யா வந்தார். பவர்பிளேயில் (முதல் 6 ஓவரில்) அந்த அணி ஒரு விக்கெட்டுக்கு 40 ரன்கள் சேர்த்தது. இந்த சீசனில் பவர்பிளேயில் அந்த அணி எடுத்த குறைந்தபட்ச ரன் இதுவாகும். 9-வது ஓவரில் முதல் சிக்சரை ஹர்திக் பாண்ட்யா பறக்க விட்டார். வேகப்பந்து மற்றும் சுழற்பந்து வீச்சை பவுண்டரிக்கு விரட்டி வேகமாக ரன் சேர்த்த விருத்திமான் சஹா 47 ரன்னில் (37 பந்து, 6 பவுண்டரி) குருணல் பாண்ட்யா பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
ஹர்திக் பாண்ட்யா அரைசதம்
அடுத்து வந்த அபினவ் மனோகர் (3 ரன்), விஜய் சங்கர் (10 ரன்) நிலைக்கவில்லை. விஜய் சங்கர், நவீன் உல்-ஹக் பந்து வீச்சில் போல்டு ஆனார். இது ஐ.பி.எல். போட்டியில் நவீன் உல்-ஹக் வீழ்த்திய முதல் விக்கெட்டாகும். முதலில் நிதானமாகவும் பிறகு வேகமாகவும் மட்டையை சுழற்றிய ஹர்திக் பாண்ட்யா, ரவி பிஷ்னோய் பந்து வீச்சில் தொடர்ச்சியாக 2 சிச்கர்கள் விளாசியதுடன் 44 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். நடப்பு தொடரில் அவர் அடித்த முதல் அரைசதம் இதுவாகும்.
கடைசி ஓவரில் மார்கஸ் ஸ்டோனிஸ் வீசிய முதல் பந்தை சிக்சருக்கு விரட்டிய ஹர்திக் பாண்ட்யா (66 ரன்கள், 50 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) அடுத்த பந்தில் பவுண்டரி எல்லையில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். ஸ்டோனிஸ் கடைசி பந்தில் டேவிட் மில்லர் (6 ரன்) விக்கெட்டையும் காலி செய்தார்.
136 ரன்கள் இலக்கு
20 ஓவர்களில் குஜராத் அணி 6 விக்கெட்டுக்கு 135 ரன்களில் கட்டுப்படுத்தப்பட்டது. ராகுல் திவேதியா 2 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். லக்னோ தரப்பில் குருணல் பாண்ட்யா, மார்கஸ் ஸ்டோனிஸ் தலா 2 விக்கெட்டும், நவீன் உல்-ஹக், அமித் மிஸ்ரா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதனையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் லோகேஷ் ராகுல், கைல் மேயர்ஸ் ஆகியோர் இறங்கினர். முதல் ஓவரை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மெய்டனாக வீசினார். அவரது அடுத்த ஓவரில் லோகேஷ் ராகுல் 'ஹாட்ரிக்' பவுண்டரிகள் விளாசி 14 ரன்னை எட்டிய போது எல்லாவிதமான 20 ஓவர் போட்டிகளையும் சேர்த்து 7 ஆயிரம் ரன் மைல்கல்லை தொட்டார்.
அணியின் ஸ்கோர் 55 ரன்னை எட்டிய போது (6.3 ஓவரில்) தொடக்க ஜோடி பிரிந்தது. கைல் மேயர்ஸ் 24 ரன்னில் (19 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) ரஷித் கான் சுழலில் போல்டு ஆனார். இதனை அடுத்து குருணல் பாண்ட்யா, லோகேஷ் ராகுலுடன் கைகோர்த்தார். நிலைத்து நின்று ஆடிய லோகேஷ் ராகுல் 38 பந்துகளில் அரைசத்தை பூர்த்தி செய்தார். இது ஐ.பி.எல். போட்டி தொடரில் அவர் அடித்த 33-வது அரைசதமாகும். 14-வது ஓவர் முடிவில் அந்த அணி ஒரு விக்கெட்டுக்கு 105 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. அதன் பிறகு ஆட்டத்தின் போக்கில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது. மட்டையை வேகமாக சுழற்ற முடியாமல் திணறிய லக்னோ அணியினர் விக்கெட்டுகளை வேகமாக பறிகொடுத்தனர். குருணல் பாண்ட்யா 23 ரன்னிலும், நிகோலஸ் பூரன் ஒரு ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
குஜராத் அணி திரில் வெற்றி
கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவையாக இருந்தது. பரபரப்பான அந்த ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மொகித் ஷர்மா பிரமாதமாக வீசினார். இதில் முதல் பந்தில் 2 ரன் எடுத்த லோகேஷ் ராகுல் ( 68 ரன்கள், 61 பந்து, 8 பவுண்டரி) அடுத்த பந்தில் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். 3-வது பந்தில் மார்கஸ் ஸ்டோனிஸ் (0) கேட்ச் கொடுத்தும், 4-வது பந்தில் ஆயுஷ் பதோனியும் (8 ரன்), 5-வது பந்தில் தீபக் ஹூடாவும் (2 ரன்) ரன்-அவுட் ஆனார்கள். கடைசி பந்தில் ரன் எதுவும் வரவில்லை.
20 ஓவர்களில் லக்னோ அணி 7 விக்கெட்டுக்கு 128 ரன்களே எடுத்தது. இதனால் குஜராத் அணி 7 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. குஜராத் அணி தரப்பில் மொகித் ஷர்மா, நூர் அகமது தலா 2 விக்கெட்டும், ரஷித் கான் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். குஜராத் அணியின் பவுலர் மொகித் ஷர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார்.
6-வது ஆட்டத்தில் ஆடிய குஜராத் அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். லக்னோ அணிக்கு இது 3-வது தோல்வியாகும்.