ஜடேஜா அபார சதம்: இந்திய அணி முதல் இன்னிங்சில் 416 ரன்களுக்கு ஆல் அவுட்


ஜடேஜா அபார சதம்: இந்திய அணி முதல் இன்னிங்சில் 416 ரன்களுக்கு ஆல் அவுட்
x

இக்கட்டான சூழலில் களத்திற்கு வந்த ஜடேஜா, பொறுப்புடன் விளையாடி சதமடித்து அசத்தினார்.

பர்மிங்காம்,

கடந்த ஆண்டு கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில்லும், புஜாராவும் களமிறங்கினர். கில் 17 ரன்னிலும், புஜாரா 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். விகாரியும் 20 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 11 ரன்னில் போல்டானார். ஸ்ரேயஸ் அய்யர் 15 ரன்னில் ஆண்டர்சன் பந்துச்சில் விக்கெட் கீப்பர் பில்லிங்சிடம் பிடிபட்டார். இதனால் இந்திய அணி 100 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.

இதையடுத்து ரிஷப் பண்ட்டும், ஜடேஜாவும் இணைந்து தடுமாடிய இந்திய அணியை நல்ல நிலைக்கு கொண்டு வந்தனர். ஜடேஜா பொறுமையுடன் ஆட ,மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 89 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். அவர் 146 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்த ஜடேஜா, டெஸ்ட் போட்டியில் தனது 3 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 194 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடைசியில் பும்ரா தன் பங்குக்கு அதிரடி காட்டி 2 சிக்சருடன்31 ரன்களை திரட்டினார்.

இறுதியில் இந்திய அணி 84.5 ஓவர்களில் 416 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்க உள்ளது.


Next Story