கோலி, ரோகித்தால் மட்டுமே உலகக் கோப்பையை வெல்ல முடியாது - இந்திய முன்னாள் கேப்டன்


கோலி, ரோகித்தால் மட்டுமே உலகக் கோப்பையை வெல்ல முடியாது - இந்திய முன்னாள் கேப்டன்
x

ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவில் இந்த வருடம் நடைபெற உள்ளது.

மும்பை,

2023 ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. 2011ம் ஆண்டுக்கு பின்னர் இந்திய அணி மீண்டும் உலக கோப்பையை வெல்லுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டுள்ளனர். இப்போதே 2011 ரிப்பீட் ஆகுமா என்றும், தோனிக்குப் பிறகு இந்தியா ரோகித் சர்மா தலைமையில் 3-வது உலகக் கோப்பையை வென்று விடும் என்றும் ஆவலுடன் எதிர்பார்ப்பவர்களுக்கு கபில் தேவ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகக் கோப்பையை ஒன்றுமில்லாத நிலையிலிருந்து வென்றவர் கபில் தேவ். இந்திய அணி முதல் உலக கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் கைப்பற்றியது. இன்று இந்தியாவில் கிரிக்கெட் இத்தனைப் பிரபலமாக இருக்கிறது என்றால் அதற்கு அடித்தளமிட்டவர் அவர் என்றால் அது மிகையாகாது. இந்திய வீரர்களின் பார்வையில் கிரிக்கெட்டின் அர்த்தத்தை மாற்றியவர்.

இந்நிலையில் கபில் தேவ் அளித்த பேட்டியில் 2023 உலகக் கோப்பையை இந்தியா வெல்லுமா? என்ற கேள்விக்கு நேர்மையாக பதில் அளித்துள்ளார். இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமெனில் ரோகித் சர்மா, விராட் கோலி அல்லது 2-3 வீரர்களை, தனிப்பட்ட வீரர்களை நம்பிப் பயனில்லை என்று கூறி உள்ளார்.

"உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமா? பயிற்சியாளர், தேர்வாளர்கள் மற்றும் அணி நிர்வாகம் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். தனிப்பட்ட நலன்கள் புறந்தள்ளப்பட வேண்டும். அவர்கள் அணியைப் பற்றி சிந்திக்க வேண்டும். விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் 2-3 வீரர்கள் உலகக் கோப்பையை வெல்வார்கள் என்று நீங்கள் நினைத்தால், அது ஒருபோதும் நடக்காது.

உங்கள் அணியை நீங்கள் நம்ப வேண்டும். நம்மிடம் அப்படி ஒரு அணி இருக்கிறதா? என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ள வேண்டும். அதற்குக் கண்டிப்பாக எங்களிடம் குறிப்பிட்ட மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்களா? ஆமாம் கண்டிப்பாக! உலகக் கோப்பையை வெல்லக் கூடிய வீரர்கள் எங்களிடம் உள்ளனர் என்று அவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக் கொண்டு தன்னம்பிக்கையுடன் ஒரு அணியை தேர்வு செய்ய வேண்டும்.

எப்போதும் 2-3 வீரர்கள் அணியின் தூண்களாகத் தங்களை உருவாக்கிக் கொண்டுள்ளார்கள். அவர்களைச் சுற்றியே அனைத்தும் பின்னப்படுகிறது, தேர்வு செய்யப்படுகிறது, இப்படி இருக்கக் கூடாது. ஆனால், நாம் இந்தப் போக்கை உடைத்து குறைந்தது 5-6 மேட்ச் வின்னர்களை உருவாக்க வேண்டும்.

அதனால்தான் சொல்கிறேன், விராட் மற்றும் ரோகித்தை நம்பி இருக்க முடியாது. தங்களின் ஒவ்வொரு பொறுப்புகளையும் நிறைவேற்றும் வீரர்கள் தேவை. இளைஞர்கள் முன் வந்து 'இது எங்கள் நேரம்' என்று சொல்ல வேண்டும்" .

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story