இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: நியூசிலாந்து 329 ரன்னில் ஆல்-அவுட்


இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: நியூசிலாந்து 329 ரன்னில் ஆல்-அவுட்
x

டேரில் மிட்செல் இங்கிலாந்துக்கு எதிராக ‘ஹாட்ரிக்‌’ சதம் அடித்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற சிறப்பை பெற்றார்.

லீட்ஸ்,

இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து தொடக்க நாளில் 5 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்திருந்தது. டேரில் மிட்செல் (78 ரன்), விக்கெட் கீப்பர் டாம் பிளன்டெல் (45 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 329 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பிளன்டெல் 55 ரன்னிலும், டேரில் மிட்செல் 109 ரன்களிலும் (228 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழந்தனர். தொடர்ந்து 3 டெஸ்டுகளில் சதம் அடித்துள்ள டேரில் மிட்செல் இங்கிலாந்துக்கு எதிராக 'ஹாட்ரிக்‌' சதம் அடித்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற சிறப்பை பெற்றார். அத்துடன் இங்கிலாந்து மண்ணில் நடக்கும் தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த நியூசிலாந்து வீரர் (3 டெஸ்டில் 482 ரன்) என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆனார். இங்கிலாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச் 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து, நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களின் 'ஸ்விங்' தாக்குதலில் நிலைகுலைந்தது. டாப்-3 வீரர்களான அலெக்ஸ் லீஸ் (4 ரன்), ஜாக் கிராவ்லி (6 ரன்), ஆலி போப் (5 ரன்) டிரென்ட் பவுல்ட்டின் பந்துவீச்சில் வரிசையாக போல்டு ஆனார்கள். முன்னாள் கேப்டன் ஜோ ரூட் (5 ரன்), கேப்டன் பென் ஸ்டோக்ஸ்(18 ரன்) , விக்கெட் கீப்பர் பென் போக்சும் (0) தாக்குப்பிடிக்கவில்லை.


55 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து தவித்த இங்கிலாந்து அணியை ஜானி பேர்ஸ்டோவும், அறிமுக வீரர் ஜாமி ஓவர்டானும் ஒன்றிணைந்து நிமிர வைத்தனர். 48 ஓவர் முடிந்திருந்த போது அந்த அணி 6 விக்கெட்டுக்கு 263 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது பேர்ஸ்டோ 129 ரன்களுடனும், ஓவர்டான் 89 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருந்தனர்.


Next Story