'இந்தியாவுக்கு எதிரான தோல்வி நல்லது தான்': பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் சொல்கிறார்


இந்தியாவுக்கு எதிரான தோல்வி நல்லது தான்: பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் சொல்கிறார்
x

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் படுதோல்வி அடைந்தது.

கொழும்பு,

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் மாற்று நாளான நேற்று முன்தினம் தொடர்ந்து நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் 228 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் படுதோல்வி அடைந்தது. இதில் 357 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய அந்த அணி 32 ஓவர்களில் 128 ரன்னில் அடங்கிப்போனது.

தோல்வி குறித்து பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் கிராண்ட் பிராட்பர்ன் (நியூசிலாந்து) வித்தியாசமான கருத்தை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'நாங்கள் 3 மாதங்களாக எந்த ஆட்டத்திலும் தோல்வி அடையவில்லை. இந்த தோல்வி, நாங்கள் களத்தில் ஒவ்வொரு நாளும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதை சரியான நேரத்தில் நினைவுப்படுத்தி இருக்கிறது. எனவே கடந்த 2 நாட்களில் எங்களுக்கு கிடைத்த இந்த தோல்வியை ஒருவகையில் நல்ல பரிசாகவே கருதுகிறேன். இந்த தோல்வியை அளித்த இந்திய அணிக்கு நன்றி. ஏனெனில் இது ஆசிய கோப்பையில் இந்த தருணத்திலும், உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாகவும் வந்து இருக்கிறது.

உலகின் சிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாடும் வாய்ப்பு எங்களுக்கு அடிக்கடி கிடைக்கவில்லை. எனவே இந்திய அணிக்கு எதிராக விளையாட கிடைத்த இந்த வாய்ப்பு அருமையானதாகும். அனேகமாக இதுபோன்ற சீதோஷ்ண நிலையில் தான் உலகக் கோப்பை போட்டியிலும் விளையாட வேண்டியது இருக்கும்.

கடந்த ஒரு மாதங்களாக எங்களது பேட்டிங் ஒருசேர 'கிளிக்' ஆகவில்லை. என்றாலும் இதனை ஒரு நேர்மறையான அறிகுறியாக தான் எடுத்து கொள்ள வேண்டும். எங்களது பேட்ஸ்மேன்கள் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் சரியான நிலைக்கு வருவார்கள் என்பது எங்களுக்கு தெரியும். இந்தியாவுக்கு எதிரான 2 ஆட்டங்களிலும் எங்களது பீல்டிங் மெச்சக்கூடியதாக இருக்கவில்லை. இந்த பிரச்சினையை சரிசெய்ய நாங்கள் கடினமாக உழைத்து வருகிறோம். எங்களிடம் தலைசிறந்த பீல்டர்கள் இருக்கின்றனர்' என்றார்.


Next Story