பெண்கள் பிரிமீயர் லீக்: முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி...!!
முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க லீக் ஆட்டத்தில் குஜராத்தை ஊதித்தள்ளி மும்பை அணி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.
மும்பை,
முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நவிமும்பையில் உள்ள டி.ஓய். பட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று இரவு கோலாகலமாக தொடங்கியது. தொடக்க விழாவில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
போட்டியில் பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் ஸ்மிர்தி மந்தனா, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் மெக் லானிங், குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் பெத் மூனி, உ.பி.வாரியர்ஸ் அணியின் கேப்டன் அலிசா ஹீலி ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டனர்.விழாவில் போட்டிக்கான கோப்பை அறிமுகம் செய்யப்பட்டது.
தொடக்க விழாவையொட்டி 1 மணி நேரம் கண்கவர் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்தி நடிகைகள் கியாரா அத்வானி, கீர்த்தி சனோன் ஆகியோர் நடனமாடி ரசிகர்களை கவர்ந்தனர்.
முதலாவது லீக் ஆட்டம்
வருகிற 26-ந் தேதி வரை மும்பையில் நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 2-வது, 3-வது இடத்தை பெறும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் சந்திக்கும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியை எட்டும்.
தொடக்க நாளான நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிய முதலாவது லீக் ஆட்டத்தில் பெத் மூனி தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ்-ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
ஹர்மன்பிரீத் அரைசதம்
'டாஸ்' ஜெயித்த குஜராத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த மும்பை அணியின் தொடக்க வீராங்கனைகளாக யாஸ்திகா பாட்டியா, ஹேய்லே மேத்யூஸ் ஆகியோர் களம் இறங்கினர். யாஸ்திகா பாட்டியா 1 ரன்னில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இருப்பினும் பேட்டிங்குக்கு அனுகூலமான இந்த ஆடுகளத்தில் மும்பை அணியினர் அச்சமின்றி மட்டையை சுழற்றி ரசிகர்களுக்கு விருந்து படைத்ததுடன் அணியின் ஸ்கோரையும் வேகமாக உயர்த்தினர்.
அதிரடியாக ஆடிய நாட்சிவெர் 23 ரன்னிலும் (18 பந்து, 5 பவுண்டரி), ஹெய்லி மேத்யூஸ் 47 ரன்னிலும் (31 பந்து, 3 பவுண்டரி 4 சிக்சர்) ஆட்டம் இழந்தனர். அரைசதம் விளாசிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 65 ரன்னில் (30 பந்து, 14 பவுண்டரி) சினே ராணா பந்து வீச்சில் ஹேமலதாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்த போட்டி தொடரில் முதல் அரைசதம் அடித்த வீரர் என்ற சிறப்பை ஹர்மன்பிரீத் பெற்றார். அடுத்து களம் புகுந்த பூஜா வஸ்ட்ராகர் (15 ரன்) நிலைக்கவில்லை.
மும்பை அணி வெற்றி
20 ஓவர்களில் மும்பை அணி 5 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது. அமலியா கெர் 45 ரன்களுடனும் (24 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்), இஸ்சி வோங் 6 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். குஜராத் தரப்பில் சினே ராணா 2 விக்கெட்டும், ஆஷ்லி கார்ட்னெர், தனுஜா கன்வார், ஜார்ஜியா வார்ஹாம் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய குஜராத் அணி, மும்பை வீராங்கனைகளின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 15.1 ஓவர்களில் 64 ரன்னில் அடங்கியது. இதனால் மும்பை அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஹேமலதா ஆட்டம் இழக்காமல் 29 ரன்னும், மோனிகா பட்டேல் 10 ரன்னும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. கேப்டன் பெத் மூனி ரன் எதுவும் எடுக்காத நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். மும்பை தரப்பில் சாய்கா இஷாக் 4 விக்கெட்டும், நடாலி சிவெர், அமலியா கெர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இன்றைய ஆட்டங்கள்
இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் (மாலை 3.30 மணி) , உ.பி.வாரியர்ஸ்-குஜராத் ஜெயன்ட்ஸ் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிகளை ஸ்போர்ட்ஸ் 18, கலர்ஸ் தமிழ் ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.