விக்கெட் எடுத்த பின் வித்தியாசமான கொண்டாட்டம்? - மதீஷா பதிரனா கூறிய பதில்
சென்னை சூப்பர் கிங்ஸ் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
சென்னை,
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இதனிடையே, நேற்று நடந்த 49வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. சென்னையில் நடந்த இப்போட்டியில் மும்பையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.
இப்போட்டியில் சிறப்பாக பந்து வீசிய பதிரனா 4 ஓவர்கள் வீசி 15 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து, சிறப்பாக பந்து வீசிய பதிரனா ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.
போட்டியின் போது விக்கெட் எடுத்த பின் மதீஷா பதிரனா வித்தியாசமான முறையில் அதை கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். விக்கெட் எடுத்த பின் கண்களை மூடி வானத்தை நோக்கி பார்த்தவாறு சில வினாடிகள் அமைதியாக இருப்பது போன்று மதீஷா கொண்டாடுகிறார்.
இந்த வித்தியாசமான கொண்டாட்டம் குறித்து போட்டி முடிந்த பின் தொகுப்பாளர் மதீஷாவிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மதீஷா, சென்னை சூப்பர் கிங்ஸ் உடனான எனது பயணம் கடந்த ஆண்டு தொடங்கியது. மாற்று வீரராக நான் வந்து 2 போட்டிகள் மட்டுமே விளையாடினேன். ஆனால், இந்த ஆண்டு நான் நிறைய போட்டிகளில் விளையாடி வருகிறேன். இதில் எனக்கு மகிழ்ச்சி. சென்னை அணி நிர்வாகம் எனக்கு நிறைய நம்பிக்கை கொடுத்துள்ளது. டி20 கிரிக்கெட்டில் இது தான் எனது சிறந்த பவுலிங். எனது ஆட்டத்தில் எனக்கு மகிழ்ச்சி. நான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தீவிர ரசிகன் (விக்கெட் எடுத்த பின்) அவரை போல் கொண்டாடுவேன்' என்றார்.