ஆசிய கோப்பை, உலக கோப்பையை இந்தியா வெல்ல உதவுவதே எனது முக்கிய நோக்கம்: விராட் கோலி


ஆசிய கோப்பை, உலக கோப்பையை இந்தியா வெல்ல உதவுவதே எனது முக்கிய நோக்கம்: விராட் கோலி
x

கோப்புப்படம்

ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பையில் இந்தியா வெல்ல உதவுவதே தனது நோக்கம் என முன்னாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய அணி 3 ஒருநாள் போட்டி, 5 டி20 போட்டியில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. விராட் கோலி சர்வதேச போட்டிகளில் சரியாக விளையாட முடியாமல் திணறி வருகிறார்.

அவர் கடைசியாக 3 வருடத்திற்கு முன்பு சதம் அடித்தார். கடந்த ஆண்டு வரை அவர் எப்போது சதம் விளாசுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால், இப்போது அவர் ரன் ஸ்கோர் செய்தாலே போதும் என்ற நிலை உருவாகி உள்ளது. டெஸ்ட், டி20, ஒருநாள் என அனைத்து பார்மெட்டிலும் சிறப்பாக செயல்படும் விராட் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை மொத்தம் 23,726 ரன்களை எடுத்துள்ளார்.

இந்நிலையில் "ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பையில் இந்திய அணி வெல்ல உதவுவதே எனது நோக்கம். அதற்காக எதையும் செய்யத் தயாராக உள்ளேன்" என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

33 வயதான விராட்கோலி சமீபத்தில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் விளையாடினார், ஆனால் அவரால் பெரிய ஸ்கோரை எடுக்க முடியவில்லை. இந்த அக்டோபரில் டி20 உலகக் கோப்பையும், அடுத்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையும் நடைபெற உள்ள நிலையில், கோலியின் பார்ம் தற்போது முக்கியமானதாக கருதப்படுகிறது. மேலும் அவரது மேட்ச் வின்னிங் திறன்களை குறைத்து மதிப்பிட முடியாது.

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான அணியில் கோலியின் பெயர் இடம்பெறவில்லை. ஆனால் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற உள்ள ஆசிய கோப்பைக்கு அவர் திரும்புவார் என்று தெரிகிறது.


Next Story