புஜாராவிடமிருந்து அந்த 'ஷாட்டை' நான் எதிர்பார்க்கவில்லை - ரவி சாஸ்திரி


புஜாராவிடமிருந்து அந்த ஷாட்டை நான் எதிர்பார்க்கவில்லை - ரவி சாஸ்திரி
x

புஜாராவிடமிருந்து அந்த ஷாட்டை எதிர்பார்க்கவில்லை என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

லண்டன்,

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதி வருகின்றன.

இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 469 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து 2வது இன்னிங்சில் ஆடிய ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. இதையடுத்து, 444 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்தியா நேற்று களமிறங்கியது.

இறுதியில் 4ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்துள்ளது. விராட் கோலி 44 ரன்களுடனும், ரஹானே 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று (5-ம் நாள்) ஆட்டத்தின் இறுதிநாள் என்ற நிலையில் இந்தியா வெற்றிபெற இன்னும் 280 ரன்கள் தேவைப்படுகிறது. அதேவேளை ஆஸ்திரேலியா வெற்றிபெற இன்னும் 7 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும். இதனால் இன்றைய கடைசி நாள் ஆட்டத்திற்கு பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்பதில் சந்தேகமில்லை.

இதனிடையே, 2வது இன்னிங்சில் இந்திய அணியின் புஜாரா 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கம்மின்ஸ் பந்துவீச்சில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

இந்நிலையில், புஜாரா அவுட் ஆன விதம் குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், புஜாராவிடமிருந்து அந்த ஷாட்டை நான் எதிர்பார்க்கவில்லை. அது அவுட் ஆவதற்கான ஷாட். ரன் அடிக்க வேண்டும் என்ற அழுத்தம் எதுவும் இல்லை.. ஆனால், இது மிகவும் மோசமான ஷாட் தேர்வு. ரோகித் ஷர்மாவும், புஜாராவும் ஆடிய ஷாட்களுக்கு அவர்களே அவர்களை உதைத்துக்கொள்ள வேண்டும். ஆட்டத்தின் கடைசி நாளில் (இன்று) முதல் பகுதியில் இந்தியா வேகமாக ரன் அடித்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை வெல்ல இந்தியாவுக்கு வாய்பு உள்ளது' என்றார்.


Next Story