ஒருநாள் கிரிக்கெட்; இந்திய அணியில் இடம் கிடைக்காதது குறித்த கேள்விக்கு சஞ்சு சாம்சன் அளித்த பதில்
இந்திய கிரிக்கெட் அணி கடந்த சில தினங்களுக்கு முன் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி கடந்த சில தினங்களுக்கு முன் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் ஆடியது. இந்த தொடருக்கான இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சன் இடம் பிடித்திருந்தார். ஆனால் ஒருநாள் தொடருக்கான அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெறவில்லை.
குறிப்பாக கடந்த 2023 டிசம்பர் மாதம் தென் ஆப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடர் 2 போட்டிகளின் முடிவில் சமனில் இருந்தது. அப்போது 3வது போட்டியில் மிடில் ஆர்டரில் அபாரமாக விளையாடிய சாம்சன் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
ஆனால் அதற்கு அடுத்ததாக இந்தியா விளையாடிய ஒருநாள் தொடரில் சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற கவுதம் கம்பீர் கூட அவருக்கு வாய்ப்பு வழங்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்ததுள்ளது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து செய்தியாளர் ஒருவர் சஞ்சு சாம்சன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து சாம்சன் கூறியதாவது, அவர்கள் என்னை அழைக்கும் போது நான் விளையாட செல்ல வேண்டும். அழைக்கவில்லை என்றால் பரவாயில்லை. அணி நன்றாக செயல்படும் போது அதைப்பற்றி நான் அதிகமாக சிந்திக்கக்கூடாது. நான் நேர்மறையாக இருந்து என்னால் என்ன செய்ய முடியுமோ அதில் கவனம் செலுத்துகிறேன்.
அதே சமயம் கடினமாக உழைத்து என்னுடைய ஆட்டத்தை முன்னேற்றுவதற்கு அதிகப்படியான பயிற்சிகளை எடுக்கிறேன். அந்த வகையில் என்னுடைய கெரியரை நான் முன்னோக்கி எடுத்துச் செல்ல விரும்புகிறேன். என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தி எனது ஆட்டத்தை முன்னேற்ற விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.