இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இலங்கை பெண்கள் அணி ஆறுதல் வெற்றி


இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இலங்கை பெண்கள் அணி ஆறுதல் வெற்றி
x

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை பெண்கள் அணி ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.

தம்புல்லா,

இந்தியா-இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் நேற்று நடந்தது. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 39 ரன்கள் (33 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 33 ரன்னும், ஸ்மிர்தி மந்தனா 22 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனை அடுத்து ஆடிய இலங்கை அணி 17 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் சமாரி அட்டப்பட்டு 48 பந்துகளில் 14 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 80 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்ததுடன், ஆட்டநாயகி விருதையும் தனதாக்கினார். இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தொடர்நாயகி விருதை கைப்பற்றினார். முதல் 2 போட்டியில் தோற்று தொடரை இழந்த இலங்கை அணி ஆறுதல் வெற்றி கண்டது. அத்துடன் 20 ஓவர் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 12 போட்டிகளில் கண்ட தோல்வி பயணத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. முடிவில் இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதனை அடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது போட்டி பல்லகெலேவில் வருகிற 1-ந் தேதி நடக்கிறது.


Next Story