ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் நெருக்கடி நிறைந்ததாக இருக்கும் - பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேட்டி


ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் நெருக்கடி நிறைந்ததாக இருக்கும் - பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேட்டி
x

கோப்புப்படம்

தினத்தந்தி 13 Aug 2022 2:21 AM GMT (Updated: 13 Aug 2022 4:40 AM GMT)

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது.

லாகூர்:

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் நெருக்கடி நிறைந்ததாக இருக்கும் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறியுள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட்

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது.

இதில் ஒரே பிரிவில் அங்கம் வகிக்கும் பரம போட்டியாளர்களான இந்தியாவும், பாகிஸ்தானும் 28-ந்தேதி துபாயில் லீக்கில் மோதுகின்றன. அதன் பிறகு சூப்பர்4 சுற்றிலும் இவ்விரு அணிகளும் சந்திக்க உள்ளன. கணிப்புபடி எல்லாம் சரியாக நகர்ந்தால் இறுதிப்போட்டியிலும் இந்தியா-பாகிஸ்தான் பலப்பரீட்சை நடத்த வேண்டி வரும்.

இதையொட்டி பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவும், பாகிஸ்தானும் மொத்தம் 3 முறை மோத வாய்ப்புள்ளது. அவ்வாறு நடந்தால் 3 ஆட்டத்திலும் பாகிஸ்தான் வெற்றி பெறுமா, இந்த ஆட்டத்தை எந்த மாதிரி எதிர் கொள்வீர்கள்' என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த பாபர் அசாம், 'இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை இன்னொரு சாதாரணமான ஆட்டமாகவே எடுத்துக் கொள்ள முயற்சிப்போம்' என்றார்.

நெருக்கடி இருக்கும்

மேலும் அவர் கூறும் போது, 'நிச்சயம் வேறு விதமான நெருக்கடி இருக்கத் தான் செய்யும். கடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை (10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்தது) எந்த மாதிரி அணுகினோமோ அதை போன்று இப்போதும் செய்வோம்.

எங்களது திறமை மீது நம்பிக்கை வைத்து சொந்த ஆட்டத்தில் முழு கவனத்தையும் செலுத்துவோம். எங்களது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். களத்தில் முழு முயற்சியை வெளிப்படுத்துவது தான் எங்களது கையில் உள்ளதே தவிர முடிவு அல்ல. ஆனால் திறமைக்கு ஏற்ப ஆடினால் முடிவு சாதகமாக அமையும்' என்றார்.

பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷகீன் ஷா அப்ரிடி உள்ளிட்ட வீரர்கள் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார்கள். காயத்தால் இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஷகீன் ஷா அப்ரிடி விளையாட முடியாமல் போனது.

இது போன்ற வீரர்கள் பணிச்சுமை காரணமாக ஏதாவது ஒரு வடிவிலான கிரிக்கெட்டில் இருந்து விலகினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா என்று நிருபர் ஒருவர் கேட்டார். அதற்கு 27 வயதான பாபர் அசாம், 'மூன்று வடிவிலான போட்டிகளில் விளையாடுவது என்பது உடல்தகுதியை சார்ந்த விஷயம்.

தற்போது எங்களிடம் உள்ள உடல்தகுதியை வைத்து பார்க்கும் போதும், 2 வடிவிலான போட்டிகளில் மட்டும் விளையாடினால் போதும் என்ற நிலை வரவில்லை. எனக்கு வயதாகி விட்டதாக நீங்கள் நினைக்கிறீர்களா? பணிச்சுமை அதிகரித்தால் அதன் பிறகு எங்களது உடல்தகுதியை இன்னும் மேம்படுத்திக் கொள்வோம்' என்றார்.

சோயிப் மாலிக்குக்கு இடமில்லை

பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், ஆல்-ரவுண்டருமான 40 வயதான சோயிப் மாலிக் கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆடினார்.

அதன் பிறகு தேசிய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட அவர் உள்ளூர் 20 ஓவர் கிரிக்கெட் லீக்கில் நன்றாக விளையாடி வருகிறார். அவர் பாகிஸ்தான் அணியில் மீண்டும் இடம் பிடித்தால் அவரது அனுபவம் உதவிகரமாக இருக்கும் என்று அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இதை சுட்டிகாட்டி 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் அணிக்கு சோயிப் மாலிக் திரும்ப வாய்ப்புள்ளதா ? என்றும் பாபர் அசாமிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வாய்ப்பு இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.


Next Story