'பாகிஸ்தான் அணியின் பலமே அவர்களுடைய பந்துவீச்சு தான்'- விராட் கோலி
ஆசிய கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை நடைபெற உள்ளது.
கொழும்பு,
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு இந்த முறை ஆசிய கோப்பை 50 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது.
இதன்படி இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் புதன்கிழமை தொடங்கியது. அதில் நேபாள அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றியோடு தொடரை தொடங்கியது
இதில் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் எதிர் பார்க்கும் இந்தியா -பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை நடைபெற உள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் பலமே அவர்களுடைய பந்துவீச்சு தான். அதை எதிர்கொள்வதற்கு உங்களுடைய முழு திறமையை வெளிப்படுத்த வேண்டுமென இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கூறியுள்ளார்.
இது பற்றி விராட் கோலி பேசியது பின்வருமாறு;-
"அவர்களுடைய பலம் பந்துவீச்சு என்று நான் கருதுகிறேன். குறிப்பாக போட்டியின் எந்த நேரத்திலும் வெற்றியை பறிக்கும் அளவுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் சில தரமான பந்துவீச்சாளர்கள் அவர்களிடம் இருக்கின்றனர். எனவே நல்ல நுணுக்கங்களை அடிப்படையாகக் கொண்ட அவர்களை எதிர்கொள்வதற்கு நீங்கள் உங்களுடைய சிறந்த செயல்பாடுகளில் இருக்க வேண்டும்" என்று கூறினார்.
மேலும் அவர் "நான் என்னுடைய ஆட்டத்தை எப்படி முன்னேற்றலாம் என்பதை புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். அது தான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பயிற்சியிலும் ஒவ்வொரு வருடமும் நீண்ட காலமாக என்னுடைய அணிக்கு சிறப்பாக செயல்பட உதவி வருகிறது. நீங்கள் ஒரு சிறந்த நிலையை அடைந்த பின் மேற்கொண்டு தொடுவதற்கு எந்த நிர்ணயிக்கப்பட்ட சாதனைகளும் கிடையாது. அதனால் ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட சூழ்நிலையில் இருந்து எப்படி என்னுடைய அணியை வெற்றி பெற வைக்கலாம் என்பதே என்னுடைய மனநிலையாகும். அதற்காக ஒவ்வொரு நாளும் முன்னேறுவதற்கு நான் பயிற்சிகளை எடுத்து வருகிறேன்" என்று கூறியுள்ளார்.