இந்தியா இதை செய்யாவிட்டால் இந்தியாவில் நடைபெறும் உலகக்கோபையில் பாகிஸ்தான் பங்கேற்காது - பாக். மந்திரி


இந்தியா இதை செய்யாவிட்டால் இந்தியாவில் நடைபெறும் உலகக்கோபையில் பாகிஸ்தான் பங்கேற்காது - பாக். மந்திரி
x

இந்தியா இதை செய்யாவிட்டால் இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்காது என அந்நாடு விளையாட்டுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

லாகூர்,

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் தொடங்க உள்ளது. சென்னை, மும்பை, டெல்லி, அகமதாபாத், பெங்களூரு என நாட்டின் பல்வேறு நகரங்களில் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இதில் பல்வேறு நாடுகளின் அணிகள் பங்கேற்க உள்ளன. போட்டி அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள போட்டியில் பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா மோத உள்ளன.

இதனிடையே, இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்கேற்குமா? என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.

முன்னதாக அடுத்த மாதம் இறுதியில் ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. பாகிஸ்தான், இலங்கையில் நடைபெற உள்ள இந்த தொடரில் பாகிஸ்தானில் நடைபெற உள்ள போட்டிகளில் இந்தியா பங்கேற்காது என இந்தியா அறிவித்தது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை இலங்கையில் நடத்த வேண்டுமென இந்தியா கோரிக்கை விடுத்தது. ஆனால், ஆசிய கோப்பையில் இந்திய அணி எங்கள் நாட்டில் வந்து விளையாட வேண்டும் இல்லையேல் இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பையில் எங்கள் அணி பங்கேற்காது என எச்சரிக்கை விடுத்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பையில் பங்கேற்பது குறித்து முடிவெடுக்க பாகிஸ்தான் அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. பாகிஸ்தான் விளையாட்டுத்துறை மந்திரி, வெளியுறவுத்துறை மந்திரி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ள இந்த குழு கலந்தாலோசித்து இந்தியாவில் நடைபெறும் போட்டிக்கு வீரர்களை அனுப்பலாமா? வேண்டாமா? என்பது குறித்து முடிவு எடுக்க உள்ளது.

இந்த குழுவின் முடிவின் அடிப்படையிலேயே இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்கேற்குமா? பங்கேற்காதா? என்பது தெரியவரும்.

பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பையில் இந்தியா பங்கேற்காவிட்டால் இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்காது என அந்நாடு விளையாட்டுத்துறை மந்திரி இஷன் மசாரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதால் இந்த விவகாரத்தில் என் கருத்து என்னவென்றால் ஆசிய கோப்பையை பொதுவான மைதானத்தில் (பாகிஸ்தான் அல்லாமல் இலங்கையில்) விளையாட வேண்டுமென இந்தியா கோரிக்கை வைக்கும்போது உலகக்கோப்பையையும் பொதுவான மைதானத்தில் (இந்தியாவில் அல்லாமல் இலங்கை போன்ற பிற நாடுகளில்) விளையாட வேண்டுமென நாங்கள் கோரிக்கை விடுப்போம்' என்றார். இந்த விவகாரத்தில் 11 மந்திரிகள் கொண்ட குழு ஆலோசனை நடத்தி முடிவை பிரதமர் ஷெரிப்பிடம் தெரிவிப்போம் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு செல்லுமா? என்பது குறித்து பிரதமர் தான் இறுதி முடிவு எடுப்பார்' என்றார்.


Next Story