ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்த ஷமி: ஒரு ஓவர் மட்டுமே வீச என்ன காரணம்?- கேப்டன் ரோகித் விளக்கம்


ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்த ஷமி: ஒரு ஓவர் மட்டுமே வீச என்ன காரணம்?- கேப்டன் ரோகித் விளக்கம்
x

Image Courtesy: BCCI/ PTI

டி20 உலக கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் இன்று இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

பிரிஸ்பேன்,

16 அணிகள் பங்கேற்கும் 8வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நேற்று தொடங்கியது. 16 அணிகளில் 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறின. மீதமுள்ள 4 அணிகளை தேர்வு செய்யும் விதமாக முதல் சுற்று ஆட்டங்களில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

ஆஸ்திரேலியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக 10 நாட்களுக்கு முன்பே ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சென்று விட்டது. நேரடியாக சூப்பர்12 சுற்றில் அடியெடுத்து வைக்கும் இந்திய அணி வருகிற 23-ந்தேதி பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய அணிக்கு இரண்டு (ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக) அதிகாரபூர்வ பயிற்சி ஆட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது பயிற்சி ஆட்டம் பிரிஸ்பேனில் இன்று நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கே.எல்.ராகுல் 57 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 50 ரன்கள் என சிறப்பாக விளையாட 20 ஓவர்களில் இந்தியா 186/7 ரன்களை குவித்தது. கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தி வெற்றி பாதைக்கு அருகில் சென்றது.

அந்த அணியில் ஓப்பனிங் வீரர்கள் மிட்செல் மார்ஷ் (35), ஆரோன் ஃபிஞ்ச் (76) என அட்டகாசமான தொடக்கத்தை கொடுத்தனர். இதன்பின்னர் வந்த ஸ்டீவ் ஸ்மித் (11), க்ளென் மேக்ஸ்வெல் (23) என அடிக்க ஆஸ்திரேலிய அணி 19 ஓவர்களில் 176 /6 ரன்களை எடுத்து வலுவாக இருந்தது.

இதனால் கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவை என்ற சூழல் உருவானது. பேட் கம்மின்ஸ், ஆஷ்டின் ஆகர் களத்தில் இருந்ததால் கடைசி ஓவரில் எப்படியும் ஆஸ்திரேலியா வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. அதே நேரத்தில் இந்திய அணிக்கு சவாலான கடைசி ஓவரை யார் வீசப்போகிறார்கள் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத முடிவை ரோகித் சர்மா எடுத்தார். முகமது ஷமியை 20வது ஓவரை போட அழைத்தார் ரோகித் . இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த போட்டியில் ஷமி அதுவரை ஒரு ஓவரை கூட வீசவில்லை. கடைசி ஓவரில் முதல் 2 பந்துகளில் 4 ரன்கள் சென்றது. அடுத்த 4 பந்துகளில் தனது முழு பார்மை நிரூபித்தார் ஷமி.

3வது பந்தை பேட் கம்மின்ஸ் தூக்கி அடிக்க, அதனை கோலி அட்டகாசமான கேட்ச்-ஆக பிடித்தார். 4வது பந்தில் ஷமி, ஆஷ்டின் ஆகரை ரன் அவுட்டாக்கினார். 5வது பந்தில் ஷமி வீசிய துல்லியமான யார்க்கரில் ஜோச் இங்கிலீஸ் போல்டானார். 6வது பந்தையும் யார்க்கர் ஆக ஷமி வீச, கேன் ரிச்சர்ட்சன் ஆட்டமிழந்தார். இதனால் 4 பந்துகளில் 4 விக்கெட்களை ஷமி வீழ்த்த 20 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில்ஒரு ஓவர் மட்டுமே வீசிய ஷமி 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

இந்த நிலையில் போட்டி முடிந்த பிறகு பேசிய ரோகித் சர்மா, கடைசி ஓவரை மட்டும் முகமது ஷமிக்கு கொடுத்த காரணத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரோகித் பேசுகையில், "அவர் (ஷமி) நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் விளையாட வருகிறார். எனவே அவருக்கு ஒரு ஓவர் கொடுக்க விரும்பினோம். குறிப்பாக அவருக்கு ஒரு சவாலை கொடுக்க விரும்பினேன். அதனால் தான் இறுதி ஓவரை வீச அவரை அழைத்தேன். அவர் என்ன செய்தார் என்பதை நீங்கள் பார்த்தீர்கள்" என்றார்.

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் பும்ரா கடைசி நேரத்தில் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியதால் அவருக்கு பதிலாக ஷமி அணியில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் அணிக்கு திரும்பிய முதல் போட்டியிலே ஷமி தனது அனுபவத்தின் மூலம் இந்திய அணிக்கு வெற்றி தேடி தந்துள்ளார்.


Next Story