சர்வதேச ஒரு நாள் போட்டியில் அதிக சதங்கள் விளாசியவர்களின் வரிசையில் 3-வது இடத்தில் ரோகித் சர்மா..!!
சர்வதேச ஒரு நாள் போட்டியில் அதிக சதங்கள் விளாசியவர்களின் வரிசையில் 3-வது இடத்திற்கு ரோகித் சர்மா முன்னேறியுள்ளார்.
புது டெல்லி,
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். அரைஇறுதியை எட்டுவதற்கு குறைந்தது 6 வெற்றிகள் அவசியமாகும்.
இதில் தலைநகர் டெல்லியில் நேற்று அரங்கேறிய 9-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. 'டாஸ்' ஜெயித்த ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷகிடி பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
இதையடுத்து முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டு இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தது. உலகக்கோப்பையில் அந்த அணியின் 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இந்திய தரப்பில் பும்ரா 4 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும் சாய்த்தனர்.
பின்னர் 273 ரன்கள் இலக்கை நோக்கி இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், இஷான் கிஷனும் களம் புகுந்தனர். குட்டி அணியான ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்த ரோகித் சர்மா சிக்சரும், பவுண்டரியுமாக தெறிக்கவிட்டு ரசிகர்களை குதூகலத்தில் மிதக்க வைத்தார். பரூக்கி, ஒமர்ஜாய், நபி ஆகியோரது பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். அவரது ராக்கெட் வேக அடியால் இந்தியா 11.5 ஓவர்களில் 100-ஐ தொட்டது.
பேட்டுக்கு ஏதுவான இந்த ஆடுகளத்தில் தொடர்ந்து ருத்ரதாண்டவமாடிய ரோகித்சர்மா 18-வது ஓவரிலேயே 63 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். ஒரு நாள் போட்டியில் அவரது 31-வது சதமாக பதிவானது.
ஆப்கானிஸ்தானுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய ரோகித் சர்மா 131 ரன்களில் (84 பந்து, 16 பவுண்டரி, 5 சிக்சர்) ரஷித்கானின் சுழலில் போல்டு ஆனார். அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் களம் இறங்கினார். ஐயர் அடித்த ஒரு சிக்சர் 101 மீட்டர் தூரத்துக்கு பறந்தது. நடப்பு உலகக்கோப்பையின் மெகா சிக்சர் இது தான்.
இறுதியில் கோலியின் பவுண்டரியுடன் இன்னிங்ஸ் சுபமாக முடிவுக்கு வந்தது. இந்திய அணி 35 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 273 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. விராட் கோலி 55 ரன்னுடனும் (56 பந்து, 6 பவுண்டரி), ஸ்ரேயாஸ் அய்யர் 25 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
ரோகித் சர்மாவுக்கு ஒரு நாள் போட்டியில் இது 31-வது சதமாகும். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் போட்டியில் அதிக சதங்கள் விளாசியவர்களின் வரிசையில் 3-வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங்கை (30 சதம்) பின்னுக்கு தள்ளினார். இப்போது டாப்-3 இடங்களில் இந்திய வீரர்களான தெண்டுல்கர் (49 சதம்), விராட் கோலி (47 சதம்), ரோகித் சர்மா (31 சதம்) ஆகியோர் உள்ளனர்.