மும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி தோல்வி: பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்த பெங்களூரு


தினத்தந்தி 21 May 2022 7:29 PM GMT (Updated: 21 May 2022 7:31 PM GMT)

டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

மும்பை,

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடந்த 69-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

இப்போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய முடியும் என்ற நெருக்கடியுடன் டெல்லி அணி களமிறங்கியது. இப்போட்டியில் டெல்லி தோல்வியடைந்தால் 16 புள்ளிகள் பெற்றிருந்த பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழையும். இதனால், இந்த ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

போட்டியில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்துள்ளது.

இதனை தொடர்ந்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. ஏற்கனவே, பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்த மும்பை அணி எந்தவித அழுத்தமும் இன்றி இலக்கை நோக்கி களமிறங்கியது. அந்த அணியின் இஷான் கிஷன் 48 ரன்கள் குவித்தார். அதிரடியாக ஆடிய டிம் டேவிட் 11 பந்தில் 34 ரன்கள் குவித்தார். இறுதியில் மும்பை அணி 19.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கான 160 ரன்களை எடுத்தது. இதன் மூலம் டெல்லியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றிபெற்றது.

மும்பைக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் டெல்லி அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்தது. டெல்லி தோல்வியடைந்ததால் 16 புள்ளிகள் பெற்றிருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4-வது இடத்திற்கு முன்னேறியது. இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் 4-வது அணியாக பெங்களூரு பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. இதனை பெங்களூரு ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்குள் தகுதிபெற்றுள்ள 4 அணிகள் விவரம்;- குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு.


Next Story