தென்ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 25-ந்தேதி நடக்கிறது
தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 25-ந்தேதி நடக்கிறது.
கேப்டவுன்,
கடந்த ஆண்டு நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி முதல் சுற்றுடன் வெளியேறியது. தோல்வி எதிரொலியாக பவுமா 20 ஓவர் போட்டி கேப்டன்ஷிப்பில் இருந்து விலகினார். தற்போது பவுமா டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டி அணியின் கேப்டனாக இருக்கிறார்.
இந்த நிலையில் தென்ஆப்பிரிக்க 20 ஓவர் போட்டி அணியின் புதிய கேப்டனாக 28 வயதான ஆல்-ரவுண்டர் எய்டன் மார்க்ரம் நியமிக்கப்பட்டு உள்ளார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்ததும் அந்த நாட்டு அணிக்கு எதிராக தென்ஆப்பிரிக்கா 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர்போட்டிகளில் ஆடுகிறது. முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 25-ந்தேதி செஞ்சூரியனில் நடக்கிறது.
தென்ஆப்பிரிக்க 20 ஓவர் போட்டி அணி வருமாறு:- மார்க்ரம் (கேப்டன்), குயின்டான் டி காக், போர்ச்சுன், ரீஜா ஹென்ரிக்ஸ், மார்கோ ஜேன்சன், ஹென்ரிச் கிளாசென், சிசான்டா மஹாலா, டேவிட் மில்லர், இங்கிடி, அன்ரிச் நோர்டியா, வெய்ன் பார்னெல், ககிசோ ரபடா, ரோசவ், ஷம்சி, டிரிஸ்டான் ஸ்டப்ஸ்.
20 ஓவர் அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட பவுமா வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணியை வழிநடத்த உள்ளார். அத்துடன் வெள்ளைநிற பந்து போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் வீரர் டுமினியும், பந்து வீச்சு பயிற்சியாளராக கிளென்வெல்த்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.