இலங்கை-பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட்: இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி
இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது.
கொழும்பு,
இலங்கை- பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை 166 ரன்களில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்திருந்தது. அப்துல்லா ஷபிக் (87 ரன்), கேப்டன் பாபர் அசாம் (28 ரன்) களத்தில் இருந்தனர். மழை காரணமாக 2-வது நாளில் வெறும் 10 ஓவர்கள் மட்டுமே பந்துவீசப்பட்டன.
இந்த நிலையில் 3-வது நாளான நேற்று பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினர். பாபர் அசாம் 39 ரன்களில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாத் ஷகீல் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். இதுவரை 7 டெஸ்டில் ஆடியுள்ள சாத் ஷகீல் ஒவ்வொரு டெஸ்டிலும் ஏதாவது ஒரு இன்னிங்சில் குறைந்தது 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். இதன் மூலம் முதல் 7 டெஸ்டில் தொடர்ச்சியாக அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.
அவருக்கு பிறகு வந்த விக்கெட் கீப்பர் சர்ப்ராஸ் அகமதுவுக்கு, வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோ வீசிய 'பவுன்சர்' பந்து ஹெல்மெட்டை பதம் பார்த்தது. தலைக்குள் அதிர்வு இருப்பதாக உணர்ந்ததால் 14 ரன்களுடன் 'ரிட்டயர்ட் ஹர்ட்' ஆகி வெளியேறினார். அவருக்கு பதிலாக மாற்று வீரராக விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் சேர்க்கப்பட்டார். இதற்கு மத்தியில் 5-வது விக்கெட்டுக்கு அப்துல்லா ஷபீக்குடன், ஆஹா சல்மான் ஜோடி சேர்ந்து அணிக்கு மேலும் வலுவூட்டினர். அபாரமாக ஆடிய அப்துல்லா ஷபிக் தனது முதலாவது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். ஸ்கோர் 468 ரன்களை எட்டிய போது அப்துல்லா ஷபிக் 201 ரன்களில் (326 பந்து, 19 பவுண்டரி, 4 சிக்சர்) கேட்ச் ஆனார்.
இதைத் தொடர்ந்து மாற்று வீரர் முகமது ரிஸ்வான் இறங்கினார். அவரது ஒத்துழைப்புடன் ஆஹா சல்மான் தனது 2-வது சதத்தை அடித்தார். ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 132 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 563 ரன்கள் குவித்து, 397 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது. இந்த மைதானத்தில் பாகிஸ்தானின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஆஹா சல்மான் 132 ரன்களுடனும் (148 பந்து, 15 பவுண்டரி, ஒரு சிக்சர்), முகமது ரிஸ்வான் 37 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முகமது ரிஸ்வான் அரைசதம் அடித்த உடன் டிக்ளேர் செய்தது. பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்பிற்கு 576 ரன்கள் குவித்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 410 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆஹா சல்மான் முந்தைய நாள் ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இதனை அடுத்து தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது இலங்கை அணி. தொடக்க ஆட்டக்காரர்கள் கருணாரத்னே மற்றும் நிசன் மதுஷ்கா களம் இறங்கினர். இவர்கள் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் 69 ரன்கள் அமைத்து நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். பாகிஸ்தான் அணி வீரர் நோமன் அலி பந்துவீச்சில் இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதன் பிறகு இலங்கை அணியின் நிலைமை தலைகீழ் ஆனது. மேத்யூஸ் தவிர மற்ற வீரர்கள் யாரும் தாக்குபிடிக்கவில்லை. இலங்கை அணியின் 7 விக்கெட்டுகளை நோமன் அலி வீழ்த்தி தனது சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்தார். கடைசி 3 விக்கெட்டுகளை நசீம் ஷா வீழ்த்தினார். முடிவில் இலங்கை அணி 67.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்கள் மட்டுமே எடுத்தது. அரைசதம் அடித்த மேத்யூஸ் 63 ரன்களுடன் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.
முடிவில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆட்டநாயகனாக இரட்டைசதம் அடித்த அப்துல்லா ஷபிக் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகன் விருது ஆஹா சல்மானுக்கு வழங்கப்பட்டது.