மார்ஷ், சால்ட் அதிரடி வீண்: 9 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி திரில் வெற்றி


மார்ஷ், சால்ட் அதிரடி வீண்: 9 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி திரில் வெற்றி
x

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி திரில் வெற்றியை பதிவு செய்தது.

புதுடெல்லி,

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 40வது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி கேப்பிட்டல்ஸ் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இதையடுத்து, ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, மயங்க் அகர்வால் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் அகர்வால் 5 ரன்னில் வெளியேற, அடுத்துவந்த திரிபாதி 10 ரன்னிலும், கேப்டன் மார்க்ரம் 8 ரன்னிலும், ஹெரி புரோக் ரன் எதுவும் எடுக்காமலும் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

பின்னர் களமிறக்கிய ஹென்ட்ரிச் கால்சனுடன் ஜோடி சேர்ந்த தொடக்க வீரர் அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அபிஷேக் சர்மா 36 பந்துகளில் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர், அப்துல் சமாத் உடன் ஜோடி சேர்ந்த கால்சன் அதிரடி காட்டினார். கால்சன் 27 பந்துகளில் 4 சிக்சர் 2 பவுண்டரி உள்பட 53 ரன்கள் குவித்தார். சமாத் 21 பந்துகளில் 28 ரன்கள் குவித்தார்.

இறுதியில் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் குவித்தது. டெல்லி தரப்பில் அந்த அணியின் மிச்செல் மார்ஷ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைத்தொடர்ந்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் டெல்லி அணியின் சார்பில் கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் பிலிப் சால்ட் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் வார்னர் (0) ரன் ஏதும் எடுக்காமல் போல்ட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்ததாக சால்டுடன், மிட்செல் மார்ஸ் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. ஐதராபாத் அணியின் பந்துவீச்சை நாலா புறமும் சிதறடித்த இந்த ஜோடியில் பிலிப் சால்ட் 29 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்திருந்தநிலையில், 59 (35) பந்துகளில் வெளியேறினார்.

அவரைத்தொடர்ந்து மிட்செல் மார்ஸ் 28 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்து, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தநிலையில் 63 (39) ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய பிரியம் கார்க் 12 (9) ரன்களும், சர்ப்ராஸ் கான் 9 ரன்களும் எடுத்து போல்ட் ஆகி வெளியேறினார்.

அடுத்ததாக அக்சர் பட்டேலுடன், ரிப்பல் பட்டேல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடி அணியை வெற்றிபெற வைக்க போராடினர்.

இறுதியில் ரிப்பல் பட்டேல் 11 (8) ரன்களும், அக்சர் பட்டேல் 29 (14) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் டெல்லி அணி 20 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணியின் சார்பில் அதிகபட்சமாக மார்க்கண்டே 2 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார், ஹூசைன், நடராஜன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி திரில் வெற்றியை பதிவு செய்தது.


Next Story