ஒரே போட்டியில் பல சாதனைகளை படைத்த சூர்யகுமார் யாதவ்- குவியும் பாராட்டுகள்..!!


ஒரே போட்டியில் பல சாதனைகளை படைத்த சூர்யகுமார் யாதவ்- குவியும் பாராட்டுகள்..!!
x

Image Courtesy: Twitter @BCCI 

தினத்தந்தி 2 Oct 2022 6:31 PM GMT (Updated: 2022-10-03T00:03:47+05:30)

தற்சமயம் ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இருக்கும் ஒரே இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் தான்.

கவுகாத்தி,

இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இதில் 20 ஓவர் தொடரில் திருவனந்தபுரத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதை தொடர்ந்து நேற்று 2-வது டி20 போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ராகுல், ரோகித், கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் அதிரடியால் 237 ரன்களை குவித்தது. பின்னர் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இந்த போட்டியில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 22 பந்துகளில் 61 ரன்கள் குவித்து மிரட்டினார்.

இவரின் பங்களிப்பு இந்திய அணி தொடரை வெல்ல உதவிகரமாக இருந்தது. இந்த போட்டியில் மட்டுமின்றி சமீப காலமாக சூர்யகுமார் யாதவ் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக மைதானத்தின் எந்த திசையிலும் பந்தை எளிதாக சிக்ஸர் அடிக்கும் திறனை அவர் பெற்றுள்ளார். தற்சமயம் ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இருக்கும் ஒரே இந்திய வீரர் இவர் தான்.

இந்த நிலையில் இன்று நடந்த போட்டியிலும் சூர்யகுமார் பல சாதனைகளை படைத்துள்ளார். குறிப்பாக சர்வதேச டி20 போட்டிகளில் மிகவும் குறைந்த பந்துகளில் (573 பந்துகள்) ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

★ குறைவான பந்துகளில் ஆயிரம் ரன்களை எட்டிய வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு:-

573 பந்துகள் - சூர்யகுமார் யாதவ்

604 பந்துகள்- கிளென் மேக்ஸ்வெல்

635 பந்துகள்- கொலின் மன்றோ

640 பந்துகள்- எவின் லூயிஸ்

654 பந்துகள்- திசர பெரேரா

அதே போல் டி20 போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த (இன்னிங்ஸ் அடிப்படையில்) வீரர்கள் பட்டியலில் இவர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

★அதிவேகமாக 1000 ரன்களை கடந்த இந்திய வீரர்களின் பட்டியல்:-

விராட் கோலி - 27 இன்னிங்ஸ்

கேஎல் ராகுல் - 29 இன்னிங்ஸ்

சூர்யகுமார் யாதவ் - 31 இன்னிங்ஸ்

மற்றொரு சாதனையாக சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக அரை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சூர்யகுமார் யாதவ், லோகேஷ் ராகுலுடன் 2-வது இடத்தை பகிர்ந்துள்ளார்.

★இந்தியாவுக்காக அதிவேக அரைசதம் அடித்த வீரர்கள்

யுவராஜ் சிங் - 12 பந்துகள்

லோகேஷ் ராகுல் - 18 பந்துகள்

சூர்யகுமார் யாதவ் - 18 பந்துகள்

ஒரே போட்டியில் பல சாதனைகளை படைத்த சூர்யகுமார் யாதவை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் உட்பட பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.


Next Story