டி20 உலக கோப்பை: புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறிய ஆஸ்திரேலியா


டி20 உலக கோப்பை: புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறிய ஆஸ்திரேலியா
x

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி, அயர்லாந்தை எளிதில் தோற்கடித்து 2-வது வெற்றியை ருசித்தது.

பிரிஸ்பேன்,

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர்12 சுற்றில் பிரிஸ்பேனில் நேற்று நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, அயர்லாந்தை (குரூப்1) சந்தித்தது. 'டாஸ்' ஜெயித்த அயர்லாந்து கேப்டன் ஆன்டி பால்பிர்னி, முதலில் ஆஸ்திரேலியாவை பேட்டிங் செய்ய அழைத்தார்.

இதன்படி கேப்டன் ஆரோன் பிஞ்சும், டேவிட் வார்னரும் ஆஸ்திரேலியாவின் இன்னிங்சை தொடங்கினர். தொடர்ந்து தடுமாறும் வார்னர் இந்த ஆட்டத்திலும் சோபிக்கவில்லை. அவர் 3 ரன்னில், மெக்கர்த்தி வீசிய 'ஷாட்பிட்ச்' பந்தை விரட்டிய போது 'ஷாட் பைன் லெக்' திசையில் கேட்ச் ஆனார்.

2-வது விக்கெட்டுக்கு நுழைந்த மிட்செல் மார்ஷ், லியான் ஹேன்டின் ஓவரில் 2 பிரமாதமான சிக்சர்களை விளாசினார். இதில் ஒரு சிக்சர் 102 மீட்டர் தூரத்திற்கு பறந்தது. ஆனால் மிட்செல் மார்சும் (28 ரன், 22 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அதன் பிறகு ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் சீரான வேகத்தில் நகர்ந்தது. அடுத்து வந்த மேக்ஸ்வெல் 13 ரன்னில் நடையை கட்டினார். இன்னொரு பக்கம் நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் நடப்பு தொடரில் முதல்முறையாக அரைசதம் அடித்தார்.

அணியின் ஸ்கோர் 154ஆக உயர்ந்த போது, பிஞ்ச் 63 ரன்களில் (44 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 200 ரன்களை நெருங்கும் போல் தோன்றியது. ஆனால் 18-வது மற்றும் 19-வது ஓவர்களில் கட்டுக்கோப்புடன் பந்து வீசிய ஜார்ஜ் டாக்ரெலும், ஜோஷ் லிட்டிலும் அந்த ஓவர்களில் முறையே 3 மற்றும் 4 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தனர். இதனால் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் எதிர்பார்த்ததை விட சற்று குறைந்து போனது. 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுக்கு 179 ரன்கள் குவித்தது.

பின்னர் 180 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய அயர்லாந்து பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விழிபிதுங்கினர். 25 ரன்னுக்குள் கேப்டன் ஆன்டி பால்பிர்னி (6 ரன்), பால் ஸ்டிர்லிங் (11 ரன்) உள்பட 5 முன்னணி தலைகள் உருண்டன. இதனால் அந்த அணி 100 ரன்னையாவது தொடுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நெருக்கடி மத்தியில் விக்கெட் கீப்பர் லார்கான் டக்கர் மட்டும் ஆஸ்திரேலியாவின் தாக்குதலை திறம்பட சமாளித்தார். 35 ரன்னில் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிய அவர் கடைசி வரை எதிரணி பவுலர்களுக்கு சவாலாக திகழ்ந்தார். என்றாலும் அவரது போராட்டம் அந்த அணி மூன்று இலக்கத்தை கடப்பதற்கும், தோல்வியின் வித்தியாசத்தை குறைப்பதற்கும் மட்டுமே உதவியது.

அயர்லாந்து அணி 18.1 ஓவர்களில் 137 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. டக்கர் 71 ரன்களுடன் (48 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். இதன் மூலம் ஆஸ்திரேலியா 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கம்மின்ஸ், மேக்ஸ்வெல், ஆடம் ஜம்பா, மிட்செல் ஸ்டார்க் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

4-வது ஆட்டத்தில் ஆடிய ஆஸ்திரேலியா 2 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவில்லை என்று 5 புள்ளிகளுடன் அரைஇறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. அதே சமயம் 2-வது தோல்வியை தழுவிய அயர்லாந்தின் அரைஇறுதி கனவு கலைந்தது.


Next Story