6-வது வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் இந்திய அணி: இங்கிலாந்துடன் இன்று மோதல்
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
லக்னோ,
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் லக்னோவில் இன்று நடைபெறும் 29-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
இதில், இந்தியா விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று 10 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து விளையாடிய 5 போட்டிகளில் ஒரு வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இந்திய அணியில் பேட்டிங்கில் விராட்கோலி (354 ரன்கள்), ரோகித் சர்மா (311 ரன்கள்), லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், சுப்மன் கில்லும், பந்து வீச்சில் பும்ரா (11 விக்கெட்), குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், முகமது ஷமியும் நல்ல நிலையில் உள்ளனர். கணுக்காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீளாததால் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இந்த ஆட்டத்திலும் ஆடமுடியாது.
நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி தனது முதல் 5 ஆட்டங்களில் ஒரு வெற்றி (வங்காளதேசத்துக்கு எதிராக), 4 தோல்வி (நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை அணிகளிடம்) கண்டுள்ள இங்கிலாந்து அணி ஏறக்குறைய அரைஇறுதி வாய்ப்பை இழந்து விட்டது. அந்த அணி எஞ்சிய ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றாலும், மற்ற அணிகளுக்குரிய முடிவு ஒருசேர சாதகமாக அமைந்தால் மட்டுமே சிறிய வாய்ப்பு கிட்டும்.
ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 106 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 57-ல் இந்தியாவும், 44-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் டையில் முடிந்தது. 3 ஆட்டம் முடிவில்லாமல் போனது. உலகக் கோப்பையில் மோதிய 8 ஆட்டங்களில் 4-ல் இங்கிலாந்தும், 3-ல் இந்தியாவும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டம் டையில் முடிந்தது.
இந்த உலகக் கோப்பையில் இதுவரையில் லக்னோவில் நடந்த போட்டிகளில் 2-வது பேட்டிங் செய்த அணி 2 முறை வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த அணி ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது. மேலும், அதிகபட்சமாக 311 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக 177 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
இங்கிலாந்து: பேர்ஸ்டோ, டேவிட் மலான், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டன், கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, அட்கின்சன், அடில் ரஷித்.