இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட்; இன்று 3-வது நாள் ஆட்டம் - ஆஸ்திரேலியாவுக்கு 76 ரன்கள் இலக்கு
சிறிய இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா 3-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) விளையாட உள்ளது.
இந்தூர்,
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. சுழலுக்கு சொர்க்கபுரியாக திகழும் இந்த ஆடுகளத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 109 ரன்னில் சுருண்டது.
பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா தொடக்க நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 156 ரன்கள் எடுத்திருந்தது. பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் 7 ரன்னுடனும், ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 2-வது நாளான நேற்று ஆஸ்திரேலியா தொடர்ந்து பேட்டிங் செய்தது. அஸ்வினுடன், வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் 'ரிவர்ஸ் ஸ்விங்' தாக்குதலில் மிரட்ட மளமளனெ விக்கெட்டுகளை பறிகொடுத்த ஆஸ்திரேலியா 76.3 ஓவர்களில் 197 ரன்னில் அடங்கியது.
கடைசி 11 ரன்னுக்கு அந்த அணி 6 விக்கெட்டுகளை தாரைவார்த்தது. டெஸ்ட் வரலாற்றில் ஆஸ்திரேலியாவின் மோசமான பின்வரிசை சீர்குலைவுகளில் ஒன்றாக இது வர்ணிக்கப்படுகிறது. இந்திய தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், அஸ்வின், உமேஷ் யாதவ் தலா 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.
அடுத்து 88 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா மீண்டும் சொதப்பியது. ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 60.3 ஓவர்களில் 163 ரன்களுக்கு ஆட்டமிழந்து மொத்தம் 75 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
ஆஸ்திரேலிய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 64 ரன் விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை அள்ளினார். அவர் இன்னிங்சில் 5-க்கு மேல் விக்கெட் எடுப்பது இது 23-வது முறையாகும். அத்துடன் ஒரு இன்னிங்சில் அவர் 8 விக்கெட்டை வேட்டையாடுவது இது 2-வது நிகழ்வாகும். ஏற்கனவே 2017-ம் ஆண்டு பெங்களூருவில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் 50 ரன்னுக்கு 8 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியா 76 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. சிறிய இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா 3-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) விளையாட உள்ளது. அவர்களுக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக தெரிந்தாலும், இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜா, அக்ஷர்பட்டேல் கூட்டணி ஏதாவது மாயாஜாலம் காட்டி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.