இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கை மண்ணில் பாகிஸ்தான் வீரர் ஷகீல் சாதனை.!


இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கை மண்ணில் பாகிஸ்தான் வீரர் ஷகீல் சாதனை.!
x

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி 461 ரன்கள் குவித்தது. சாத் ஷகீல் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார்.

காலே,

டெஸ்ட் கிரிக்கெட்

இலங்கை - பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை 312 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 2-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 221 ரன்கள் எடுத்திருந்தது. சாத் ஷகீல் (69 ரன்), ஆஹா சல்மான் (61 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்றைய ஆட்டம் 'அவுட்பீல்டு' ஈரப்பதம் காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் வெகுவாக ஆதிக்கம் செலுத்தினர். ஸ்கோர் 278-ஐ எட்டிய போது சல்மான் 83 ரன்னில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த நமன் அலி 25 ரன்னிலும், ஷகீன் ஷா அப்ரிடி 9 ரன்னிலும் வெளியேறினர்.

மறுமுனையில் நங்கூரம் பாய்ச்சியது போல் தன்னை திடமாக நிலைநிறுத்திக் கொண்டு மட்டையை சுழற்றிய சாத் ஷகீல் சதத்தை தாண்டி இரட்டை சதத்தை நோக்கி முன்னேறினார். அவருக்கு 10-வது வரிசையில் இறங்கிய நசீம் ஷா நன்கு ஒத்துழைப்பு தந்ததுடன், இலங்கையின் சுழல் தாக்குதலை திறம்பட சமாளித்தார். இவர்கள் 9-வது விக்கெட்டுக்கு 94 ரன்கள் திரட்டி பிரிந்தனர். நசீம் ஷா 6 ரன்னில் (78 பந்து) ரமேஷ் மென்டிசின் சுழலில் போல்டு ஆனார். இதன் பின்னர் கடைசி விக்கெட்டுக்கு அப்ரார் அகமது வந்தார்.

இலங்கை மண்ணில் ஷகீல் சாதனை

அணியை வலுவான நிலைக்கு உயர்த்தி அபாரமாக ஆடிய சாத் ஷகீல், பந்தை பவுண்டரிக்கு விரட்டி தனது முதலாவது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். இலங்கையில் பாகிஸ்தான் அணி 1986-ம் ஆண்டில் இருந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுகிறது. இங்கு டெஸ்டில் இரட்டை சதம் விளாசிய முதல் பாகிஸ்தான் வீரர் என்ற வரலாற்று சாதனைக்கு சாத் ஷகீல் சொந்தக்காரர் ஆனார். இதற்கு முன்பு 2012-ம் ஆண்டு முகமது ஹபீஸ் 196 ரன்கள் எடுத்ததே இலங்கை மண்ணில் பாகிஸ்தான் வீரரின் அதிகபட்சமாக இருந்தது.

அப்ரார் அகமது 10 ரன்னில் கேட்ச் ஆனதும், பாகிஸ்தானின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 121.2 ஓவர்களில் 461 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. 27 வயதான சாத் ஷகீல் 208 ரன்களுடன் (361 பந்து, 19 பவுண்டரி) களத்தில் இருந்தார். இலங்கை தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ரமேஷ் மென்டிஸ் 5 விக்கெட்டும், பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் 149 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 14 ரன் எடுத்துள்ளது. கேப்டன் கருணாரத்னே (6 ரன்), நிஷான் மதுஷ்கா (8 ரன்) அவுட் ஆகாமல் உள்ளனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது.


Next Story