நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: 3ம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை 65 ரன் முன்னிலை..!
இலங்கை-நியூசிலாந்து அணிகளுக்கான முதலாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்று வருகிறது.
கிறிஸ்ட்சர்ச்,
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 9ம் தேதி கிறிஸ்ட்சர்ச் நகரில் தொடங்கியது.
இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் அபாரமாக ஆடிய இலங்கை 355 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்து இருந்தது. இன்று 3ம் நாள் ஆட்டம் நடந்தது. டேரில் மிட்செல் பொறுப்புடன் விளையாடி சதம் அடித்தார். அவர் 102 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். நியூசிலாந்து 291 ரன்னுக்கு 8 விக்கெட்டை இழந்த நிலையில் மெட் ஹென்றி அதிரடியாக விளையாடினார். அவர் 75 பந்தில் 72 ரன்கள் எடுத்தார்.
மிட்செல்- ஹென்றி ஆட்டத்தால் நியூசிலாந்து சரிவில் இருந்து மீண்டது. அந்த அணி 107.3 ஓவரில் 373 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இலங்கை தரப்பில் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், குமாரா 3 விக்கெட்டும், ரஜிதா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் 18 ரன்கள் பின் தங்கிய நிலையில் இலங்கை 2வது இன்னிங்சை விளையாடியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் பெர்னாண்டோ 28 ரன்னிலும், கருணரத்னே 17 ரன்னிலும் அவுட் ஆனார்கள். 3ம் நாள் ஆட்டத்தின் முடிவில் இலங்கை அணி 38 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 83 ரன் எடுத்தது. இதன்மூலம், இலங்கை அணி 65 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 4ம் நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.
இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இதில் கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் இலங்கை அணி ஆடி வருகிறது.