டெஸ்ட் தரவரிசை: ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் 2-வது இடத்துக்கு முன்னேற்றம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது
துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் (874 புள்ளி) இரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக ஹெட்டிங்லேயில் நடந்த ஆஷஸ் 3-வது டெஸ்டில் 39 மற்றும் 77 ரன்கள் வீதம் எடுத்ததன் மூலம் இந்த ஏற்றம் கிடைத்துள்ளது. அவரது சிறந்த தரநிலை இதுவாகும். தற்போது முதலிடம் வகிக்கும் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சனை (883 புள்ளி) விட 9 புள்ளி மட்டுமே பின்தங்கி உள்ள டிராவிஸ் ஹெட், 4-வது டெஸ்டில் அசத்தினால் 'நம்பர் ஒன்' பேட்ஸ்மேனாக உயர்ந்து விடுவார். அதே சமயம் ஹெட்டிங்லே டெஸ்டில் சொதப்பிய ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் இரு இடம் சறுக்கி 4-வது இடத்திலும், லபுஸ்சேன் இரு இடம் சரிந்து 5-வது இடத்திலும், இங்கிலாந்தின் ஜோ ரூட் ஒரு இடம் குறைந்து 6-வது இடத்திலும் உள்ளனர். இதனால் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 6-ல் இருந்து 3-வது இடத்துக்கு வந்துள்ளார். இந்திய தரப்பில் ரிஷப் பண்ட் 10-வது இடத்திலும், ரோகித் சர்மா 13-வது இடத்திலும், விராட் கோலி 14-வது இடத்திலும் உள்ளனர்.
பந்து வீச்சாளர் தரவரிசையில் இந்திய சுழல் 'சூறாவளி' அஸ்வின் (860 புள்ளி) முதலிடத்தில் நீடிக்கிறார். அவரை நெருங்கி வரும் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் (828 புள்ளி) 2-வது இடத்தில் இருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் மொத்தம் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகனாக ஜொலித்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க்வுட் 9 இடம் அதிகரித்து 26-வது இடத்தை பெற்றுள்ளார். ஸ்டூவர்ட் பிராட் 4 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை எட்டியுள்ளார்.