வங்காளதேச அணிக்கு எதிரான டெஸ்ட் : ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
வங்களாதேசம் அணி தரப்பில் எபடோட் ஹொசைன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
டாக்கா,
வங்காளதேசம்- ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டியில் நேற்றைய முதல் நாள் முடிவில் வங்களாதேசம் அணி 79 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 362 ரன்கள் குவித்தது. இதனையடுத்து இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடங்கிய 7 ஓவரிலேயே வங்காளதேசம் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 382 ரன்கள் எடுத்தது.
ஆப்கானிஸ்தான் தரப்பில் நிஜாத் மசூத் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. வங்காள தேசத்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 39 ஓவர்கள் மட்டுமே தாக்குபிடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. வங்களாதேசம் அணி தரப்பில் எபடோட் ஹொசைன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் வங்காளதேசம் அணி 236 ரன்கள் முன்னிலை பெற்று விளையாடி வருகிறது.