20 ஓவர் கிரிக்கெட்டில் சிறந்த வீரர்கள் இவர்கள் தான் - ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்


20 ஓவர் கிரிக்கெட்டில் சிறந்த வீரர்கள் இவர்கள் தான் - ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்
x

20 ஓவர் கிரிக்கெட்டில் சிறந்த 5 வீரர்களை ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தேர்வு செய்துள்ளார்.

துபாய்,

7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.

முதல் சுற்றில் விளையாடும் 8 அணிகளில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். இந்தப் போட்டிக்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது. வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே உள்ளிட்ட 8 நாடுகள் முதல் சுற்றில் விளையாடுகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கிடம் டி-20 உலக கோப்பையில் அவர் தேர்வு செய்யும் முதல் 5 வீரர்கள் யார்? என கேள்வி எழுப்பப்பட்டது. இது தொடர்பாக அவர் கூறுகையில், 5 வீரர்களை தேர்வு செய்வது எளிது, ஆனால் அவர்களில் யாரை முதல் இடத்தில் தேர்வு செய்வது என்பது தான் கடினம் என்றார். பின்னர் அவர் தேர்வு செய்யும் முதல் 5 வீரர்களை கூறினார்.

அவர் தனது முதல் தேர்வாக ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கானை தேர்வு செய்துள்ளார். அடுத்து 2-வதாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம்மை தேர்வு செய்தார். அடுத்து 3 முதல் 5 வரை இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

வீரர்கள் தேர்வு குறித்து ரிக்கி பாண்டிங்க் கூறியதாவது,

ரஷித் கான் ஒரு அற்புதமான வீரர். அவர் டி-20 போட்டிகளில் தொடர்ச்சியாக விக்கெட் எடுக்கிறார். மேலும், அவரது எக்கானமி ரேட்டும் மிக குறைவாக உள்ளது என்றார். பாபர் ஆசம் உலகின் டி-20 பேட்டிங் தரவரிசையில் முதல் வீரர். அவரது சாதனைகள் அவரை பற்றி பேசும். அவர் கடந்த சில வருடங்களாக பாகிஸ்தான் அணியை அருமையாக வழிநடத்தி வருகிறார் என்றார்.

அடுத்து ஹர்த்திக் பாண்டியாவை பற்றி கூறும்போது, அவரது ஐபிஎல் ஆட்டங்கள் மிகவும் அருமையாக இருந்தது. தற்போது உலக டி-20 கிரிக்கெட்டில் அவர் தான் சிறந்த ஆல்-ரவுண்டர் என்றார். ஜோஸ் பட்லரை பற்றி கூறும்போது, நீங்கள் அவருக்கு எதிராக பயிற்சியளிக்கும் போது, மற்ற வீரர்களிடம் இல்லாத ஒன்றை அவர் கொண்டுள்ளார் என்பது உங்களுக்குத் தெரியும்.

பேட்டிங் ஆடத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஆட்டத்தை எதிர் அணியிடம் இருந்து கைப்பற்றி விடுவார் எனக் கூறினார். பும்ராவை 5-வதாக தேர்வு செய்கிறேன். மூன்று வடிவிலான போட்டிகளிலும் அவர் முழுமையான பந்து வீச்சாளர். புதிய பந்தில் மிகச் சிறப்பாக பந்து வீசுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story