டிஎன்பிஎல்: சேலம் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்


டிஎன்பிஎல்: சேலம் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
x

image tweeted by @TNPremierLeague

சேப்பாக் அணி 14.5 ஓவர்களிலேயே இலக்கை கடந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சேலம்,

8 அணிகள் இடையிலான 6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நெல்லையில் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. நெல்லை, திண்டுக்கல், கோவை ஆகிய இடங்களில் மொத்தம் 21 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.

2 நாள் ஓய்வை தொடர்ந்து இன்று சேலம் மைதானத்தில் நடைபெற்று வரும் 22-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி பேட்டிங்கை தொடங்கிய சேலம் அணி சீரான இடைவெளியில் முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்தது. துவக்க ஆட்டக்காரர் கோபிநாத்தை (42 ரன்கள்) தவிர பிற முன்னணி பேட்ஸ்மேன்கள் யாரும் சொல்லிக்கொள்ளும் படி விளையாடவில்லை.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்களை சேலம் அணி எடுத்தது. இதையடுத்து 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக கௌசிக் காந்தியும், நாராயண் ஜெகதீசனும் களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.

இதனால், சேப்பாக் அணி வெற்றிப்பாதையில் சென்றது. கௌசிக் காந்தி 46 ரன்களும், நாராயண் ஜெகதீசன் 39 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சோனு யாதவ் 3 சிக்சருடன் 26 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

இறுதியில் சேப்பாக் அணி 14.5 ஓவர்களிலேயே இலக்கை கடந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சேப்பாக் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்தது.


Next Story