விராட் கோலி அபார சதம்...தென் ஆப்பிரிக்காவுக்கு 327 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா...!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் ஆடி வருகின்றன.
கொல்கத்தா,
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய 37வது லீக் ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் களமிறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கேப்டன் ரோகித் சர்மா 24 பந்துகளில் 40 ரன்கள் குவித்த நிலையில் அவுட் ஆனார். சுப்மன் கில் 23 ரன்களில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த விராட் கோலி, ஸ்ரேயாஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக ஆடிய இருவரும் அரைசதம் கடந்தனர். சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் 87 பந்துகளில் 77 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து, களமிறங்கிய கே.எல்.ராகுல் 8 ரன்னில் அவுட் ஆனார்.இதையடுத்து விராட் கோலியுடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். சூர்யகுமார் யாதவ் 22 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து ஜடேஜா களம் இறங்கினார்.
மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் கோலி 101 ரன்னும், ஸ்ரேயாஸ் 77 ரன்னும் அடித்தனர். இதையடுத்து 327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி ஆட உள்ளது.