வெற்றிப்பாதைக்கு திரும்புமா பாகிஸ்தான்..? - ஆப்கானிஸ்தானுடன் இன்று மோதல்


வெற்றிப்பாதைக்கு திரும்புமா பாகிஸ்தான்..? - ஆப்கானிஸ்தானுடன் இன்று மோதல்
x
தினத்தந்தி 23 Oct 2023 5:59 AM IST (Updated: 23 Oct 2023 1:55 PM IST)
t-max-icont-min-icon

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வெற்றிப்பாதைக்கு திரும்பும் உத்வேகத்துடன் பாகிஸ்தான் அணி இன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.

சென்னை,

13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் 22-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, மற்றொரு ஆசிய அணியான ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது.

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் இதுவரை 4 ஆட்டங்களில் ஆடி 2-ல் வெற்றியும் (நெதர்லாந்து, இலங்கைக்கு எதிராக), 2-ல் தோல்வியும் (இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) சந்தித்துள்ளது. இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 367 ரன்களை வாரி வழங்கிய பாகிஸ்தான், அந்த இலக்கை நோக்கி ஆடிய போது 305 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் அப்துல்லா ஷபிக், இமாம் உல்-ஹக் செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்து தந்தும் மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் நிலைக்காததால் இலக்கை நெருங்க முடியவில்லை. குறிப்பாக உலகின் 'நம்பர் ஒன்' பேட்ஸ்மேனான கேப்டன் பாபர் அசாம் தடுமாறுவது அந்த அணிக்கு பின்னடைவாக இருக்கிறது. அவர் 4 இன்னிங்சில் வெறும் 83 ரன்களே எடுத்துள்ளார். அவர் பார்முக்கு திரும்ப வேண்டியது அவசியமாகும். முகமது ரிஸ்வான் (ஒரு சதம் உள்பட 294 ரன்) மட்டுமே அந்த அணியில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்.



'புதிய பாகிஸ்தான் அணி'

இதே போல் வேகப்பந்து வீச்சில் ஷகீன் ஷா அப்ரிடி (9 விக்கெட்) வலு சேர்க்கிறார். அதே சமயம் சுழற்பந்து வீச்சில் பலவீனம் தெரிகிறது. கடந்த ஆட்டத்தில் ஷதப் கானுக்கு பதிலாக இடம் பிடித்த சுழற்பந்து வீச்சாளர் உஸ்மா மிர் 9 ஓவரில் 82 ரன்களை விட்டுக்கொடுத்து வள்ளலாக மாறினார். முகமது நவாசும் (2 விக்கெட்) சொதப்புகிறார். சென்னை ஆடுகளம் வேகம் குறைந்தது. சுழற்பந்துவீச்சுக்கு அனுகூலமானது. எனவே சுழற்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டியது முக்கியம். அத்துடன் அரைஇறுதி வாய்ப்பில் சிக்கலின்றி நீடிக்க பாகிஸ்தான் இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டும்.

நேற்று நிருபர்களை சந்தித்த பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல்-ஹக் கூறுகையில், 'நாங்கள் இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி 2-2 என்று இருக்கிறோம். கடைசி இரு ஆட்டங்களில் நாங்கள் நன்றாக ஆடவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். குறிப்பிட்ட நாளில் நீங்கள் எப்படி விளையாடுகிறீர்கள் என்பதே முக்கியம். அது குறித்து நிறைய பேசியுள்ளோம். நாளை (இன்று) புதிய பாகிஸ்தான் அணியை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். ஆப்கானிஸ்தான் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. அதை சமாளிக்கக்கூடிய திறமை எங்களிடம் உண்டு. அண்மையில் ஒரு நாள் தொடரில் அவர்களை 3-0 என்ற கணக்கில் நாங்கள் வீழ்த்தியதை மறந்து விடக்கூடாது. சென்னையில் இருந்து கிளம்பும் போது 4-2 என்று (சென்னையில் நடக்கும் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி பெறும் பட்சத்தில்) இருப்போம் என்று நம்புகிறேன்' என்றார்.



ஆப்கானிஸ்தான் எப்படி?

ஆப்கானிஸ்தான் அணி 4 ஆட்டங்களில் விளையாடி ஒன்றில் வெற்றியும் (இங்கிலாந்துக்கு எதிராக), 3-ல் தோல்வியும் (வங்காளதேசம், இந்தியா, நியூசிலாந்துக்கு எதிராக) தழுவியுள்ளது. கடந்த ஆட்டத்தில் இதே மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிராக 139 ரன்னில் சுருண்ட ஆப்கானிஸ்தான் சரிவில் இருந்து மீளும் முனைப்புடன் உள்ளது. ஏதுவான இந்த ஆடுகளத்தில் முகமது நபி, முஜீப் ரகுமான், ரஷித்கான் ஆகியோர் சுழல் ஜாலத்தில் மிரட்டினால், இங்கிலாந்தை போன்று பாகிஸ்தானுக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளிக்கலாம். இது தான் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருக்கப்போகிறது.

ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் ஜோனதன் டிராட் நிருபர்களிடம் கூறுகையில், 'பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் என்றாலே தற்போது கடும்போட்டி நிலவுவதால் இது விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும். சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தானுடன் ஆடிய ஒரு நாள் தொடரில் ஒன்றிரண்டு ஆட்டங்களில் வென்றிருக்க வேண்டியது. நெருங்கி வந்து தோற்றோம். இந்த முறை அவர்களின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டுவோம் என்று நம்புகிறேன்' என்றார்.

சர்வதேச ஒரு நாள் போட்டியில் இவ்விரு அணிகள் இதுவரை 7 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. 7 ஆட்டத்திலும் பாகிஸ்தானே வென்று இருக்கிறது.

பிற்பகல் 2 மணிக்கு...

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

பாகிஸ்தான்: இமாம் உல்-ஹக், அப்துல்லா ஷபிக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், சாத் ஷகீல், இப்திகர் அகமது, முகமது நவாஸ், ஷதப் கான் அல்லது உஸ்மான் மிர், ஷகீன் ஷா அப்ரிடி, ஹசன் அலி, ஹாரிஸ் ரவுப்.

ஆப்கானிஸ்தான்: ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன், ரமத் ஷா, ஹஸ்மத்துல்லா ஷகிடி (கேப்டன்), அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், இக்ரம் அலிகில், முகமது நபி, ரஷித்கான், முஜீப் ரகுமான் அல்லது நூர் அகமது, நவீன் உல்-ஹக், பசல்ஹக் பரூக்கி.

பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story