பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை? - 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
பாகிஸ்தான்-இலங்கை அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று தொடங்குகிறது.
கொழும்பு,
இலங்கைக்கு சென்றுள்ள பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதில் காலேயில் நடந்த தொடக்க டெஸ்டில் பாகிஸ்தான் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டு தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று தொடங்குகிறது.
முதல் டெஸ்டில் சாத் ஷகீலின் அபாரமான இரட்டை சதத்தால் வெற்றியை தனதாக்கிய பாகிஸ்தான் இன்றைய போட்டியில் கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணும். கருணாரத்னே தலைமையிலான இலங்கை அணி சரிவில் இருந்து மீண்டு பதிலடி கொடுக்க போராடும். முதல் டெஸ்டில் தனஞ்ஜெயா டி சில்வா, மேத்யூஸ் தவிர மற்றவர்களின் பேட்டிங் மெச்சும்படி இல்லை. குறிப்பாக குசல் மென்டிஸ், சன்டிமால், சமரவிக்ரமா கணிசமான ரன் குவிக்க வேண்டியது அவசியமாகும்.
பொதுவாக இங்குள்ள ஆடுகளம் முதல் 3 நாட்களில் பேட்டிங்குக்கும், கடைசி இரு நாட்களில் சுழற்பந்து வீச்சுக்கும் உகந்ததாக இருக்கும். அதற்கு ஏற்ப இரு அணியினரும் வியூகங்களை தீட்டுகிறார்கள். ஆனால் போட்டி நடக்கும் 5 நாட்களும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் டென்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.