பெண்கள் பிரிமீயர் லீக்: குஜராத் ஜெயண்ட்ஸ் 169 ரன் சேர்ப்பு...!
பெண்கள் பிரீமியர் லீக் தொடரில் 3வது லீக் போட்டியில் உபி வாரியர்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.
மும்பை,
ஆண்கள் ஐபிஎல் போன்று பெண்கள் ஐபிஎலாக பெண்கள் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு தொடங்கியுள்ளது. பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டி நேற்று தொடங்கியது. இந்நிலையில், பெண்கள் பிரீமியர் லீக் தொடரில் 3வது லீக் போட்டியில் உபி வாரியர்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.
இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. கடந்த ஆட்டத்தில் காயமடைந்த குஜராத் அணியின் கேப்டன் பெத் மூனி ஆடவில்லை. சினே ராணா குஜராத் அணியை வழிநடத்தினார். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சப்பினேனி மேகனா, சோபியா டங்க்லி ஆகியோர் களம் இறங்கினர்.
இதில் சப்பினேனி மேகனா 24 ரன்னிலும், சோபியா டங்க்லி 13 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து ஹர்லீன் தியோல் களம் புகுந்தார். ஆனால் மறுமுனையில் களம் இறங்கிய அன்னாபெல் சதர்லேண்ட் 8 ரன்னிலும், சுஷ்மா வர்மா 9 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இதையடுத்து ஹர்லீன் தியோலுடன், ஆஷ்லே கார்ட்னர் ஜோடி சேர்ந்தார். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஷ்லே கார்ட்னர் 25 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து தயாளன் ஹேமலதா களம் இறங்கினார். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ஹர்லீன் தியோல் ஒரே ஓவரில் 4 பவுண்டரிகளை அடித்து அசத்தினார். நிலைத்து நின்று ஆடி அணிக்கு பெரிய ஸ்கோர் ஏற்படுத்து தருவார் என நினைத்திருந்த வேளையில் தியோல் 46 ரன்னுக்கு அவுட் ஆனார்.
இறுதியில் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் குவித்தது. அந்த அணி தரப்பில் ஹர்லீன் தியோல் 46 ரன், ஆஷ்லே கார்ட்னர் 25 ரன் எடுத்தனர். இதையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உபி வாரியர்ஸ் களம் இறங்க உள்ளது.