பெண்கள் பிரிமீயர் லீக்: சோபியா டங்க்லி அதிரடி...குஜராத் 201 ரன் குவிப்பு...!


பெண்கள் பிரிமீயர் லீக்: சோபியா டங்க்லி அதிரடி...குஜராத் 201 ரன் குவிப்பு...!
x

Image Courtesy: @wplt20

தினத்தந்தி 8 March 2023 9:25 PM IST (Updated: 8 March 2023 11:22 PM IST)
t-max-icont-min-icon

இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) சார்பில் முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் போட்டி மும்பை, நவி மும்பையில் நடைபெற்று வருகிறது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) சார்பில் முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் போட்டி மும்பை, நவி மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெய்ன்ட்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். `லீக்' முடிவில் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டியிலும், 2வது மற்றும் 3வது இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் சுற்றில் மோதும். அதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் ஆடும்.

இந்நிலையில் இன்று நடைபெறும் 6வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. இரு அணிகளும் தலா 2 லீக் ஆட்டங்களில் ஆடி இருந்தாலும் இன்னும் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஸ்னே ராணா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சப்பினேனி மேகனா, சோபியா டங்க்லி ஆகியோர் களம் இறங்கினர். இதில் மேகனா 8 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து டங்க்லியுடன் ஹார்லீன் தியோல் ஜோடி சேர்ந்தார். இந்த இணை பெங்களூரு அணியின் பந்துவீச்சை திறம்பட சமாளித்தது.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டங்க்லி 28 பந்தில் 65 ரன் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய ஆஷ்லீ கார்ட்னர் 19 ரன்னிலும், தயாளன் ஹேமலதா 16 ரன்னிலும் அவுட் ஆகினர். இதற்கிடையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய தியோல் அரைசதம் அடித்து அசத்தினார்.

இறுதியில் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது. அந்த அணி தரப்பில் ஹார்லீன் தியோல் 67 ரன்னும், டங்க்லி 65 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி ஆட உள்ளது.


Next Story