ஜடேஜா அபார பந்து வீச்சு: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 8-வது வெற்றியை பதிவு செய்த இந்தியா..!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார்.
கொல்கத்தா,
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் ஆடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து பேட்டிங் ஆடிய இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் குவித்தது.
இந்திய அணி தரப்பில் விராட் கோலி சதமும் (101 ரன்), ஸ்ரேயாஸ் அரைசதமும் (77 ரன்) அடித்து அசத்தினர். இதையடுத்து 327 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக், பவுமா ஆகியோர் களம் இறங்கினர். இதில் டி காக் 5 ரன்னிலும், பவுமா 11 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இதையடுத்து களம் இறங்கிய வான் டர் டுசென் 13 ரன், மார்க்ரம் 9 ரன், க்ளாசென் 1 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து டேவிட் மில்லர் மற்றும் மார்கோ யான்சென் ஜோடி சேர்ந்தனர். இதில் மில்லர் 11 ரன்னில் அவுட் ஆனார்.
இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 27.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 83 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 243 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.