உலகக்கோப்பை கிரிக்கெட்; இலங்கை அணியில் மாற்று வீரர்களாக இணைய உள்ள முன்னணி வீரர்கள்...!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை இலங்கை - நெதர்லாந்து அணிகள் மோத உள்ளன.
லக்னோ,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் நியூசிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.
இந்நிலையில் இந்த தொடரில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை - நெதர்லாந்து அணிகள் லக்னோவில் மோத உள்ளன. இதுவரை 3 ஆட்டங்களில் ஆடியுள்ள இலங்கை அணி அனைத்து ஆட்டங்களிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதனால் அந்த அணி வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் உள்ளது.
முக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் பின்னடைவைச் சந்தித்துள்ளது இலங்கை அணி. கேப்டன் ஷானகா போட்டியிலிருந்து சமீபத்தில் விலகினார். இதனால் குசல் மெண்டிஸ் இலங்கை கேப்டனாகத் தற்போது உள்ளார். மேலும், ஹசரங்காவும் காயம் காரணமாக உலகக் கோப்பை போட்டியில் இடம்பெறவில்லை.
இந்நிலையில், உலகக் கோப்பைக்கான இலங்கை அணியில் மாற்று வீரர்களாக ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீரா ஆகிய இருவரும் இணையவுள்ளார்கள் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இருப்பினும், காயம் காரணமாக வேறு யாராவது போட்டியிலிருந்து விலகினால் மட்டுமே இவர்களுக்கு விளையாடும் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.