உலக கோப்பை கிரிக்கெட்: போட்டி நடைபெறும் 2 இடங்களை மாற்றுமாறு பாகிஸ்தான் வலியுறுத்தல்..!
13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவில் நடக்கிறது.
கராச்சி,
13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவில் நடக்கிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியின் அதிகாரப்பூர்வ அட்டவணை இன்னும் வெளியாகவில்லை.
இதற்கிடையே உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வரைவு அட்டவணை சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதன்படி தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து-நியூசிலாந்து மோதுகின்றன.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8-ந்தேதி சென்னையில் சந்திக்கிறது. இந்தியா- பாகிஸ்தான் மோதும் ஆட்டம் அக்டோபர் 15-ந்தேதி அகமதாபாத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் 2 இடங்களை மாற்ற வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.), பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் அணி விளையாடும் 2 ஆட்டங்களின் இடத்தை மாற்றுமாறு கூறி இருந்தாலும் அது எந்த இடம் என்று தெரியவில்லை. அகமதாபாத்தில் விளையாட விருப்பம் இல்லை என்று பாகிஸ்தான் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.
பாகிஸ்தான் அணி ஐதராபாத், அகமதாபாத், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா ஆகிய 5 இடங்களில் விளையாட போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.