உலகக்கோப்பை கிரிக்கெட்; அரையிறுதிக்கு முன்னேறுமா நியூசிலாந்து...? - இலங்கையுடன் நாளை மோதல்...!
உலகக்கோப்பை தொடரில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.
பெங்களூரு,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.
மீதமுள்ள ஒரு அரையிறுதி இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இதில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு அரையிறுதி சுற்றுக்கு செல்ல அதிக வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் நாளை நடைபெறும் முக்கியமான ஆட்டத்தில் இலங்கை - நியூசிலாந்து அணிகள் பெங்களூருவில் மோத உள்ளன. இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் நியூசிலாந்து அணி ஆட உள்ளது.
வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் நீடிக்க முடியும். ஒருவேளை தோல்வி அடைந்தால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் தங்களது அடுத்த லீக் ஆட்டங்களில் தோல்வி அடைய வேண்டும். அப்போது நெட் ரன் ரேட் அடிப்படையில் சிறந்த அணி அரையிறுதிக்கு செல்லும்.
நாளைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டிய நிலையில் நியூசிலாந்து ஆட உள்ளதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.