வெற்றியா? தோல்வியா? டிராவா? - உலக டெஸ்ட் சாம்பியன் யார்? பரபரப்பின் உச்சத்தில் இறுதிநாள் ஆட்டம்...!
இந்தியா வெற்றிபெற இன்னும் 280 ரன்கள் தேவை அதேவேளை ஆஸ்திரேலியா வெற்றிபெற இன்னும் 7 விக்கெட்டுகள் தேவை என்ற நிலையில் ஆட்டம் சூடுபிடித்துள்ளது.
லண்டன்,
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதி வருகின்றன.
இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 469 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து 2வது இன்னிங்சில் ஆடிய ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. இதையடுத்து, 444 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்தியா நேற்று களமிறங்கியது.
இறுதியில் 4ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்துள்ளது. விராட் கோலி 44 ரன்களுடனும், ரஹானே 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
ஆட்டத்தின் கடைசி நாளான இன்று ஆட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இந்தியா வெற்றிபெற இன்னும் 280 ரன்கள் தேவைப்படுகிறது. அதேவேளை ஆஸ்திரேலியா வெற்றிபெற இன்னும் 7 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும். இதனால் இன்றைய கடைசி நாள் ஆட்டத்திற்கு பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்பதில் சந்தேகமில்லை.
இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு உள்ளது, தோல்வி வாய்ப்பும் உள்ளது. அதேவேளை போட்டி டிராவில் முடியவும் வாய்ப்பு உள்ளதால் இன்றைய ஆட்டம் உச்சபட்ச பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.