2016-ம் ஆண்டின் உலகின் சிறந்த கால்பந்து வீரராக ரொனால்டோ தேர்வு


2016-ம் ஆண்டின் உலகின் சிறந்த கால்பந்து வீரராக ரொனால்டோ தேர்வு
x
தினத்தந்தி 10 Jan 2017 10:00 PM GMT (Updated: 10 Jan 2017 9:02 PM GMT)

2016-ம் ஆண்டின் உலகின் சிறந்த கால்பந்து வீரராக ரொனால்டோ தேர்வு

ஜூரிச்,

சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா), 1991-ம் ஆண்டு முதல் உலகின் சிறந்த கால்பந்து வீரர்களை தேர்வு செய்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது. தேசிய அணியின் கேப்டன்கள், பயிற்சியாளர்கள், குறிப்பிட்ட ஊடகத்தினர், ரசிகர்களிடம் ஆன்-லைன் மூலம் வாக்கெடுப்பு நடத்தி இந்த விருது வழங்கப்படுகிறது. 2010-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை இந்த விருதை பிபா, பிரான்சின் கால்பந்து பத்திரிகையுடன் இணைந்து ‘பிபா பாலோன் டி ஓர்’ என்ற பெயரில் வழங்கி வந்தது. கடந்த ஆண்டு அந்த பத்திரிகையுடனான ஒப்பந்தத்தை பிபா முறித்து கொண்டது. இதையடுத்து 2016-17-ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை பிபா நேற்று தனியாக வழங்கியது. இதற்கான விழா சுவிட்சர்லாந்தில் உள்ள ஜூரிச்சில் நடந்தது.

2016-ம் ஆண்டுக்கான சிறந்த வீரர் விருதுக்கான பட்டியலில் போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, லயோனல் மெஸ்சி (அர்ஜென்டினா), கிரிஸ்மான் (பிரான்ஸ்) ஆகியோர் இருந்தனர். இதில் 34.54 சதவீத வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்த ரொனால்டோ சிறந்த வீரர் விருதுக்கு தேர்வானார். பெருமைக்குரிய இந்த விருதை மனைவி மற்றும் மகனுடன் வந்து அவர் பெற்றுக் கொண்டார். மெஸ்சி 26.42 சதவீத வாக்குகள் பெற்றும், கிரிஸ்மான் 7.53 சதவீதம் பெற்று தோல்வி கண்டனர். ரொனால்டோ கடந்த ஆண்டில் 44 ஆட்டத்தில் விளையாடி 42 கோல்கள் அடித்தார். 14 கோல்கள் அடிக்க உதவிகரமாக இருந்தார். மொத்தத்தில் ரொனால்டோ உலகின் சிறந்த வீரர் விருதுக்கு தேர்வானது இது 4-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் சிறந்த வீராங்கனை விருதை கார்லி லாய்ட் (அமெரிக்கா) தட்டிச்சென்றார்.

இதேபோல் ‘பிபா’ உலக கனவு கால்பந்து அணியையும் அறிவித்தது. அதில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம் வருமாறு:-

மானுவெல் நியர் (ஜெர்மனி), டேனி ஆல்வ்ஸ் (பிரேசில்), செர்ஜியோ ரமோஸ் (ஸ்பெயின்), ஜெரார்டு பிக்யூ (ஸ்பெயின்), மார்செலோ (பிரேசில்), டோனி குரூஸ் (ஜெர்மனி), இனியஸ்டா (ஸ்பெயின்), லுக்கா மோட்ரிச் (குரோஷியா), மெஸ்சி (அர்ஜென்டினா), சுவாரஸ் (உருகுவே), ரொனால்டோ (போர்ச்சுகல்).

Next Story