கால்பந்து

ஆண்களுடன் பெண்களும் மோதும் கலப்பு கால்பந்து போட்டி! + "||" + Mixed soccer match with women

ஆண்களுடன் பெண்களும் மோதும் கலப்பு கால்பந்து போட்டி!

ஆண்களுடன் பெண்களும் மோதும் கலப்பு கால்பந்து போட்டி!
விளையாட்டுப் போட்டிகள், அவை தனிநபர் போட்டிகளாக இருந்தாலும் சரி, அணி போட்டிகளாக இருந்தாலும் சரி, ஆண்களும்- ஆண்களும் அல்லது பெண்களும்- பெண்களும் மோதுவதாகவே இருக்கும்.
விளையாட்டுப் போட்டிகள், அவை தனிநபர் போட்டிகளாக இருந்தாலும் சரி, அணி போட்டிகளாக இருந்தாலும் சரி, ஆண்களும்- ஆண்களும் அல்லது பெண்களும்- பெண்களும் மோதுவதாகவே இருக்கும். ஆனால் ஆண்களும்- பெண்களும் கலந்து விளையாடும் போட்டி பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அப்படிப்பட்ட புதுமையான கால்பந்து போட்டி கேரளாவில் அரங்கேறியிருக்கிறது. உலகில் வேறு எங்கும் நடக்காத அதிசயம் இது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள தூத்து, ஒரு சிறிய கிராமம். ஆனால் பல மாநில அளவிலான, தேசிய அளவிலான கால்பந்து வீரர், வீராங்கனைகளை உருவாக்கிய ஊர் இது.

இங்குதான், ஆண்களும் பெண்களும் கலந்த கால்பந்து அணியை உருவாக்கியிருக்கிறார்கள். தூத்துவில் உள்ள தாருல் உலூம் மேனிலைப் பள்ளி யின் ‘எப்.சி. தூத்து’ அணியின் அதிசயம் இது.

மலப்புரம் கொட்டப்பாடி மைதானத்தில் சமீபத்தில் நடைபெற்ற கால்பந்து தொடரில், ‘எப்.சி. தூத்து’ அணி பங்கேற்றது. அதற்கு வசதியாக, ஆண்களுடன் பெண்களும் விளையாட எந்தத் தடையும் இத்தொடரில் விதிக்கப்படவில்லை. எனவே, பங்கேற்ற நான்கு கால்பந்து அணிகளில், ஆண்கள், பெண்களுடன், மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகளும் பங்கேற்றனர்.

கால்பந்து மோகம் அதிகமுள்ள மாநிலம், கேரளம். எனவே எங்கெங்கு காணினும் கால்பந்து அணிகள்தான். ஆனால் மகளிர் கால்பந்து அணிகள் கொஞ்சம் அரிது. உதாரணமாக, ஒட்டுமொத்த மலப்புரம் மாவட்டத்திலும் மூன்று பெண்கள் கால்பந்து அணிகள் மட்டுமே இருக்கின்றன. எனவேதான், ஆண்களுடன் பெண்களையும் களமிறக்கும் முடிவுக்கு கால்பந்து விளையாட்டு அமைப்பாளர்கள் வந்திருக்கின்றனர்.

முன் குறிப்பிட்ட தொடரை நடத்திய கேரள சாஸ்திர சாகித்ய பரிஷத், அதற்கு முன்னோட்டமாக ஆண்களும் பெண்களும் கலந்த கால்பந்து முகாம்களுக்கு ஏற்பாடு செய்தது. அதற்கு கிடைத்த வெற்றி, பாலினப் பாகுபாடு இல்லாமல் ஒரு முழு கால்பந்து தொடரையே நடத்தும் தைரியத்தை அவர்களுக்குத் தந்தது.

கேரள சாஸ்திர சாகித்ய பரிஷத்தின் இளைஞர் பிரிவான யுவசமிதியின் உறுப்பினர் ஸ்ரீஜித் இதுபற்றிக் கூறுகையில், “நாங்கள் ஒவ்வோர் ஆண்டும் ஒரு திரைப்பட விழாவை நடத்து கிறோம். இந்த ஆண்டு அந்தத் திரைப்பட விழாவையொட்டி இருபாலரும் ஒன்றாகப் பங்கேற்கும் கால்பந்து போட்டிகளை நடத்த முடிவு செய்தோம். அதற்காக நாங்கள் பெண்கள் கால்பந்து அணிகளை அணுகி, உங்களுக்கு இதில் விருப்பமா என்று கேட்டோம். அவர்களும் உடனே ஒப்புக்கொண்டார்கள். தங்கள் அணியில் இடம்பெறும் வீரர், வீராங்கனைகளை அவர்களே தேர்வு செய்தார்கள்” என்கிறார்.

“சாதாரணமாகவே நான் வீரர்களுக்கும், வீராங்கனைக்கும் ஒன்றாகத்தான் பயிற்சி அளிப்பது வழக்கம். எனவே இரு தரப்பினரும் இணைந்த கால்பந்து அணியைத் தேர்வு செய்வதில் எனக்கும் கஷ்டம் ஏதும் இருக்கவில்லை” என்று கூறுகிறார், தாருல் உலூம் பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் முனீர்.

சரி, இந்தக் கால்பந்து தொடரில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளுக்கு இந்த அனுபவம் எப்படி இருந்ததாம்?

பெண்கள், “சற்றுக் கடினமான போட்டியாகவே இருந்தது” என்று கூற, ஆண்கள் சற்றே வெட்கம் படர்ந்த முகத்துடன், “வேடிக்கையாக இருந்தது” என்கிறார்கள்.

“பையன்கள் அதிக சக்தியுடன் ஆடுவதால் அவர்கள் விளையாடியது உற்சாகமூட்டும் அனுபவமாக அமைந்தது” என்கிறார், 16 வயது கால்பந்து வீராங்கனை அர்ச்சனா.

இன்னொரு வீராங்கனை திஷா, போட்டிக்கு முன், எங்கே தான் காயம்பட்டு விடுவோமோ என்று பயந்ததாகவும், ஆனால் போட்டிக்குப் பின் வீரர்களிடம் இருந்து பல புதிய கால்பந்து உத்திகளைக் கற்றுக்கொண்டதாகவும் கூறுகிறார்.

தாருல் உலூம் பள்ளியின் உதவி தலைமையாசிரியை ஹம்சாவும், விளையாட்டு ஆசிரியர் முனீரும்தான் மாணவிகள் கால்பந்து களம் காண்பதற்கு முக்கியக் காரணமாக உள்ளனர். இவர்கள், கொச்சியில் நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து ஆட்டத்தைக் காணவும் மாணவ, மாணவிகளை அழைத்துச் சென்றார்களாம்.

தாருல் உலூம் பள்ளியின் தலைமையாசிரியர் ரகுமத்துல்லா, “எங்களுடையது இஸ்லாமிய சிறுபான்மையினப் பள்ளி. சிறுபான்மையினத்தைச் சேர்ந்த அதிக மாணவிகள் கால்பந்து ஆடவில்லை என்றபோதும், உள்ளூர் இஸ்லாமிய மக்கள், பெண்கள் கால்பந்து அணிக்கு மிகவும் ஆதரவாக உள்ளனர்” என்கிறார்.

ஆண்கள்- பெண்கள் கால்பந்து தொடரில் பங்கேற்ற, மகளிரும் கலந்த மற்றொரு கால்பந்து அணி- வள்ளிக்குன்னு கால்பந்து அகாடமி அணி.

ஆனால் இந்த அணியின் பயிற்சியாளர் ஹரிகுமார் சில பிரச்சினைகளைச் சொல் கிறார், அவற்றில் பிரதானமானது பொருளாதாரம்.

“கால்பந்து வீராங்கனைகளுக்கு எங்களால் சத்தான உணவுகளை வழங்கமுடிவதில்லை, விரிவான பயிற்சி முகாம்களை நடத்த முடிவதில்லை. ஏன், வீராங்கனைகளுக்கான ஆடை, காலணிகளுக்குக்கூட நான் என் நண்பர்களைத்தான் பணம் கேட்டுக் கெஞ்ச வேண்டியிருக்கிறது” என்கிறார்.

“வீரர், வீராங்கனைகள் கலந்த கால்பந்து தொடரை நாங்கள் ஒரு சோதனை முயற்சியாகத்தான் நடத்தினோம். இதற்குக் கிடைத்த வரவேற்பு எங்களை உற்சாகம் கொள்ள வைத்திருக்கிறது. எனவே கேரளாவில் மேலும் பல இடங்களில் இதுபோன்ற தொடர்களை நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்” என்று கொச்சி பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவரும், யுவசமிதி உறுப்பினருமான சிஞ்சு கூறுகிறார்.

“விளையாட்டில் ஆண்களையும் பெண் களையும் பிரித்து வைப்பது வழக்கமான நடைமுறையாக இருக்கிறது. அதை யாருமே வித்தியாசமாகக் கருதுவதில்லை. ஆனால் ஆண், பெண் என்று பேதம் காட்டப்படும்போது சிறுவயதிலேயே குழந்தைகளிடம் சிந்தனையிலும் நடத்தையிலும் வேறுபாடு ஏற்படுகிறது” என்று நுணுக்கமாகக் கூறுகிறார் சிஞ்சு.

கால்பந்து ஓர் உடல் வலு சார்ந்த விளையாட்டு. ஆண்மையின் அடையாளமாக கால்பந்து வீரர்கள் காட்டப்படுகிறார்கள். அத்தகைய சூழலில் பெண்களும் ஆண்களுடன் ஒன்றாக கள மிறக்கபடுவதும், அதுவும் பள்ளி அளவிலேயே அது மேற்கொள்ளப்படுவதும் புதிய புரட்சியாகக் கருதப்படுகின்றன.

“கலப்பு கால்பந்து என்பது ரொம்பவும் புதுமையானது. ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்கள் மீதான வழக்கமான கட்டுப்பாடுகளில் ஒன்றைத் தகர்க்கும் முயற்சி இது. இதுபோன்ற போட்டிகள் சாதாரணமாகும் வகையில் இவை அடிக்கடி நடத்தப்பட வேண்டும்” என்று கூறுகிறார், சங்கராச்சாரிய பல் கலைக்கழக பாலின, சுற்றுச்சூழல் மற்றும் தலித்தியல் பேராசிரியை ஷீபா.

ஷீபாவின் கருத்தை நாமும் வழிமொழிவோம்.