கால்பந்து

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: வெற்றியுடன் தொடங்கியது பிரேசில் + "||" + Junior World Cup football

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: வெற்றியுடன் தொடங்கியது பிரேசில்

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து:
வெற்றியுடன் தொடங்கியது பிரேசில்
ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது.
புதுடெல்லி,

17-வது ஜூனியர் உலக கோப்பை (17 வயதுக்கு உட்பட்டோர்) கால்பந்து போட்டி இந்தியாவில் 6 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி ‘ஏ’ பிரிவில் இந்தியா, அமெரிக்கா, கொலம்பியா, கானா, ‘பி’ பிரிவில் பராகுவே, மாலி, நியூசிலாந்து, துருக்கி, ‘சி’ பிரிவில் ஈரான், கினியா, ஜெர்மனி, கோஸ்டாரிகா, ‘டி’ பிரிவில் வடகொரியா, நைஜர், பிரேசில், ஸ்பெயின், ‘இ’ பிரிவில் ஹோண்டுராஸ், ஜப்பான், நியூகலிடோனியா, பிரான்ஸ், ‘எப்’ பிரிவில் ஈராக், மெக்சிகோ, சிலி, இங்கிலாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் சிறந்த 4 அணிகள் என்று மொத்தம் 16 அணிகள் 2-வது சுற்றுக்கு (நாக்-அவுட் சுற்று) முன்னேறும்.

2-வது நாளான நேற்று கொச்சியில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் 3 முறை சாம்பியனான பிரேசில் அணி, ஸ்பெயினை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பிரேசில் அணிக்கு ஆரம்பத்தில் அதிர்ச்சி காத்து இருந்தது.

5-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் பெர்ரான் டோரெஸ் கோலை நோக்கி அடித்த பந்தை பிரேசில் பின்கள வீரர் வெஸ்லி தடுப்பதற்கு பதிலாக கோலுக்குள் திருப்பி விட்டார். அது ஸ்பெயினுக்கு சுயகோலாக அமைந்தது.
ஆனால் அந்த அதிர்ச்சியில் இருந்து பிரேசில் அணியினர் விரைவில் மீண்டனர். ரசிகர்கள் ஆதரவு பிரேசில் அணிக்கு பலமாக இருந்தது. 25-வது நிமிடத்தில் பிரேசில் அணி பதில் கோல் திருப்பியது. அந்த அணி வீரர் லின்கான் இந்த கோலை அடித்து சமநிலை ஏற்படுத்தினார். 45-வது நிமிடத்தில் பிரேசில் அணி 2-வது கோல் அடித்தது. அந்த அணியின் பாலினோ இந்த கோலை திணித்தார்.

பிற்பாதியில் ஸ்பெயின் அணி பதில் கோல் திருப்ப எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. 56-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் செர்ஜியோ கோமஸ் கோல் அடிக்க எடுத்த நல்ல முயற்சியை பிரேசில் கோல் கீப்பர் கேப்ரியல் பிராஜா அபாரமாக செயல்பட்டு முறியடித்தார். முடிவில் பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது.
கோவாவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் ஜெர்மனி அணி 2-1 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகா அணியை சாய்த்தது. ஒரு கட்டத்தில் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடியுமோ? என்று எதிர்பார்த்த நிலையில் 89-வது நிமிடத்தில் ஜெர்மனி அணியின் மாற்றுஆட்டக்காரர் நோ அவுகு வெற்றிக்குரிய கோலை அடித்து அசத்தினார்.
மற்ற ஆட்டங்களில் ஈரான் 3-1 என்ற கோல் கணக்கில் கினியாவையும், அறிமுக அணியான நைஜர் 1-0 என்ற கோல் கணக்கில் வடகொரியாவையும் பதம் பார்த்தது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் நியூகலிடோனியா-பிரான்ஸ் (மாலை 5 மணி), சிலி-இங்கிலாந்து (மாலை 5 மணி), ஹோண்டுராஸ்-ஜப்பான் (இரவு 8 மணி), ஈராக்-மெக்சிகோ (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன.