கால்பந்து

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: இங்கிலாந்து, ஜப்பான் அபார வெற்றி + "||" + Jr. World Cup Football: England and Japan got great success

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: இங்கிலாந்து, ஜப்பான் அபார வெற்றி

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: இங்கிலாந்து, ஜப்பான் அபார வெற்றி
ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்றைய ஆட்டங்களில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான் அணிகள் அபார வெற்றி பெற்றன.

கொல்கத்தா,

ஜப்பான் வீரர் நகமுரா ‘ஹாட்ரிக்’ கோல் போட்டார்.

17–வது ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி(17 வயதுக்கு உட்பட்டோர்) இந்தியாவில் 6 நகரங்களில் நடந்து வருகிறது. பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி ‘ஏ’ பிரிவில் இந்தியா, அமெரிக்கா, கொலம்பியா, கானா, ‘பி’ பிரிவில் பராகுவே, மாலி, நியூசிலாந்து, துருக்கி, ‘சி’ பிரிவில் ஈரான், கினியா, ஜெர்மனி, கோஸ்டாரிகா, ‘டி’ பிரிவில் வடகொரியா, நைஜர், பிரேசில், ஸ்பெயின், ‘இ’ பிரிவில் ஹோண்டுராஸ், ஜப்பான், நியூகலிடோனியா, பிரான்ஸ், ‘எப்’ பிரிவில் ஈராக், மெக்சிகோ, சிலி, இங்கிலாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் 3–வது இடத்தை பிடிக்கும் சிறந்த 4 அணிகள் என்று மொத்தம் 16 அணிகள் 2–வது சுற்றுக்குள் நுழையும்

3–வது நாளான நேற்று கொல்கத்தாவில் நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் நட்சத்திர வீரர்களை உள்ளடக்கிய இங்கிலாந்து அணி, சிலியை எதிர்கொண்டது. இதில் தாக்குதல் பாணியை கையாண்ட இங்கிலாந்து பக்கமே (64 சதவீதம்) பந்து அதிகமாக சுற்றிக்கொண்டிருந்தது. 5–வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஹட்சன் கோல் கணக்கை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஜாடோன் சஞ்சோ (51 மற்றும் 60–வது நிமிடம்), ஏஞ்சல் கோம்ப்ஸ் (81 நிமிடம்) ஆகிய இங்கிலாந்து வீரர்களும் கோல்கள் போட்டனர். சிலியால் ஒரு பந்தை கூட இலக்கை நோக்கி அடிக்க முடியவில்லை. முடிவில் இங்கிலாந்து அணி 4–0 என்ற கோல் கணக்கில் சிலியை எளிதில் வீழ்த்தியது.

இதே போல் கவுகாத்தியில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸ் அணி, அறிமுக அணியான நியூகலிடோனியாவை 7–1 என்ற கோல் கணக்கில் நொறுக்கியது. நியூகலிடோனியா அணியில் பெர்னர்ட் இவா, கியாம் வானிஸ்சி ஆகியோர் சுயகோல் அடித்தது கூடுதல் பரிதாபமாகும்.

இன்னொரு ஆட்டத்தில் ஜப்பான் அணி 6–1 என்ற கோல் கணக்கில் ஹோண்டுராசை ஊதித்தள்ளியது. ஜப்பான் வீரர் நகமுரா (22, 30, 43–வது நிமிடம்) ‘ஹாட்ரிக்’ கோல் அடித்தார். இந்த உலக கோப்பையில் பதிவான முதல் ‘ஹாட்ரிக்’ இது தான்.

ஈராக்–மெக்சிகோ இடையிலான ஆட்டம் 1–1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து திருவிழாவில் ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் போட்டியை நடத்தும் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் 0–3 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவிடம் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் இந்திய அணி தனது 2–வது லீக்கில் இன்று (இரவு 8 மணி) கொலம்பியாவுடன் டெல்லி நேரு ஸ்டேடியத்தில் பலப்பரீட்சை நடத்துகிறது.

உலக கோப்பையில் முதல்முறையாக அடியெடுத்து வைத்திருக்கும் இந்தியாவுக்கு முதல் ஆட்டத்தை போன்றே இதுவும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ‘கொலம்பியா கடுமையான போட்டி கொடுக்கக்கூடிய ஒரு அணி. அதற்கு ஏற்ப நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்று இந்திய பயிற்சியாளர் லூயிஸ் நார்டன் டி மாட்டோஸ் குறிப்பிட்டார்.

இந்திய அணி அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைக்க இன்றைய மோதலில் கட்டாயம் வெற்றி காண வேண்டும், குறைந்தது ‘டிரா’வாவது செய்ய வேண்டும். இதே போல் தனது தொடக்க ஆட்டத்தில் கானாவிடம் 0–1 என்ற கணக்கில் தோல்வி அடைந்த கொலம்பியாவும் இதே நெருக்கடியில் தான் உள்ளது.

இன்றைய மற்ற ஆட்டங்களில் கானா–அமெரிக்கா (மாலை 5 மணி), துருக்கி–மாலி (மாலை 5 மணி), பராகுவே–நியூசிலாந்து (இரவு 8 மணி) ஆகிய அணிகள் மோதுகின்றன.